Thursday, September 28, 2017

சங்கே முழங்கு

ப.நீலகண்டன் இயக்கம். 4 பிப்ரவரி 1972 யில் வெளியான படம். சோ எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த கடைசிப்  படம். 1968யில் எம்.ஜி.ஆருடன் முதல் படம். மொத்தம் நான்கு வருடங்களே இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 13 படங்களில் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சிந்தாமணி என்ற எம்.ஜி.ஆருடைய நண்பனாக வருகிறார் சோ. மிகச் சில காட்சிகளிலேயே வருகிறார். இதுவும் சோ தவிர்த்திருக்க வேண்டிய படம்.

எம்.ஜி.ஆரும் அவருடைய தங்கையும் அனாதைகள். அவர்களை பணக்காரரான வி.எஸ்.ராகவன் வளர்க்கிறார். அவருடைய மேனேஜர் அசோகன் வக்கீல் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து அவரைக் கொன்று விடுகிறார். பழி எம்.ஜி.ஆர். மீது விழுகிறது. அதை அவர் தம்முடைய காதலியான லட்சுமி மற்றும் அவருடைய தந்தை பகவதி உதவியுடன் பொய் என்பதை நிரூபிப்பதே மீதி கதை. வழக்கம் போல காதில் பூவைச் சுற்றும் கதைக்களம்.

Monday, September 25, 2017

இன்பக் கனா ஒன்று கண்டேன்

1971யில் மேடையேறிய இந்நாடகம் சென்னையில் 100 முறைக்கு மேல் மேடையேறியது.

மந்தைவெளி மன்னாரு என்ற கதாபாத்திரம் காணும் பகல் கனவே இந்நாடகத்தின் கதை. ஓர் உலகில் நூறு பேர்; தங்களுக்குள் வேலைகளையும் வசதிகளையும் சரி சமமாகப் பிரித்துக் கொண்டு சமூக வாழ்க்கை வாழ்கின்றனர். அந்த நூறு பேரில் இருவருக்கு மட்டும் கொடுக்க வேலையில்லை. அதனால் அவர்கள் மற்றவர்கள் செய்யும் வேலையைக் கண்காணிக்கும் புது வேலையை உருவாக்குகிறார்கள். யார் அந்தப் பதவியைப் பிடிப்பது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்படுகிறது. அது தேர்தலில் போய் முடிகிறது. தேர்தலால் ஊழல் உருவாகிறது. தேர்தல் முடிந்து வென்றவனுக்கு உதவியவர்கள் சில சலுகைககளை எதிர்பார்க்கின்றனர். அத்தகைய ஊழலைக் கண்டு பிடிப்பவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. இப்படியே படிப்படியாக குடியாட்சியின் அனைத்துக் கேடுகளும் அறிமுகமாகி, பணமும் புழக்கத்துக்கு வந்து, அடிதடி கொலை என முடிகிறது.


தேர்தல் முறை ஒரு சமூகத்தை எப்படிச் சீரழிக்கிறது என்பதைச் சோ தமது பாணியில் அழகாகக் காண்பிக்கிறார்.

Sunday, September 24, 2017

சூதாட்டம்

1971யில் வெளியாகிய இப்படத்தை இயக்கியவர் மதுரை திருமாறன். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, முத்துராமன், சுருளிராஜன்  ஆகியோருடன் சோவும் நடித்திருந்தார்.

சோவுடைய ஜோடி மனோரமா; மாமனாராக தேங்காய் சீனிவாசன். மனைவிக்குப் பயந்த கணவனாக சோ. ரசிக்கும்படியான நகைச்சுவை; ஆனால் அரசியல் வசனங்கள் கிடையாது.

சூதாட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.