Wednesday, October 16, 2019

அடுத்த ஆட்சி நமதே

தமிழக முதல்வராக விரும்பும் ஒன்பது அரசியல்வாதிகளுக்கும் வாயுதாசன் என்ற பெயரில் தாயத்து அனுப்பி சில வழிமுறைகளைப் பின்பற்றும்படி எழுதுகிறார்கள் ஜக்கு, கந்தசாமி, மற்றும் ஆர்.என்.ஆர். அரசியல்வாதிகள் அதை உண்மை என நம்பி அடிக்கும் கூத்தே முழுக்கதை.

ஜக்கு மூலம் மெட்ராஸ் பாஷையில் புகுந்து விளையாடுகிறார் சோ. தைரியமாக எல்லா அரசியல்வாதிகளையும் அவர்களுடைய உண்மையான குணாதிசயங்களையும் விமர்சிக்கிறார். இக்கதையைப் படிக்கும் நாம் அந்த அரசியல்வாதிகள் அனைவரும் சோ சொல்லியபடியே உண்மையில் நடக்கக் கூடியவர்கள் என்பதை மிகவும் சுலபமாக உணர முடிகிறது.

சோவைத் தவிர யாருக்கும் இந்த அளவு அரசியல்வாதிகளை நேரிடையாக நையாண்டி செய்யும் தைரியம் கிடையாது. வயிறு குலுங்கச் சிரிக்கும் நாம் நம்முடைய மற்ற வேலைகளை மறந்து இக்கதையை முழுவதுமாகப் படித்து முடிப்பதிலேயே ஈடுபடுவோம்.  

யார் பெறுவார் இந்த அரியாசனம்?

ஜானகி முதல்வராக சில காலம் இருந்ததற்குப் பிறகு, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. தேர்தலில் வென்று அடுத்து யார் முதல்வர் ஆவார்கள் எனக் குழப்பம் நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் நடப்பதாகக் கற்பனைக்கதை இது. வயிறு வலிக்க நகைச்சுவையும்  அரசியல்வாதிகளை நேரிடையாகவே கேலி செய்யும் சோவின் தைரியமும் இந்தப் புத்தகத்தை சோவின் சிறந்த படைப்பாக்குகின்றன.

இறந்த காலத்தில் நடந்த அரசியல் செய்திகளைப் புட்டு புட்டு வைக்கும் பழைய ஓலைச் சுவடி கிடைக்கிறது. அதில் அடுத்த முதல்வர் யார் என்பதைக் கூறும் ஓலைச் சுவடி ஓரிடத்தில் ஒளித்து வைக்கப்பட்டுள்ளதாக எழுதி உள்ளது. அதைக் கண்டுபிடிக்க முதல்வராக விரும்பும் அரசியல்வாதிகளின் ரகசிய செயல்களும் கோமாளித்தனங்களுமே முழுக்கதை. 

Sunday, September 22, 2019

இறைவன் கொடுத்த வரம்

ரஜினிகாந்துடன் சோ சேர்ந்து நடித்த முதல் படமிது. 1978, 22 செப்டம்பரில் வெளியான இப்படத்தை ஏ பீம்சிங் இயக்கியிருந்தார்.

விஜயகுமாரும் ரஜினியும் நாயகர்கள். படாபட் ஜெயலட்சுமியும் சுமித்ராவும் நாயகிகள். ஸ்ரீகாந்த், எம்.பானுமதி போன்றோரும் நடித்திருந்தனர்.

சோவின் கேரக்டர் பெயர் ராஜா.

ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தில்  ரஜினிகாந்த் நடித்துள்ளார். பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்யும் கேரக்டர். விஜயகுமாருடைய தங்கையான சுமித்ராவைத் திருமணம் செய்தவுடன் போலீஸ் அவரைக் கைது செய்துவிடுகிறார்கள். இதற்கிடையே வழுக்கைத் தலையுடன் இருக்கும் சோவை விருப்பம் இல்லாமல் திருமணம் செய்யும் சுமித்ராவுடைய தோழி ஜெயலட்சுமி இச்சம்பவத்துக்குப் பிறகு கணவனுடன் ஒட்டுதலாக இருக்கிறார். ஸ்ரீகாந்த் சுமித்ராவை மறுமணம் செய்கிறார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் இறந்துவிடுகிறார். இதற்கிடையே விஜயகுமாருக்குத் திருமணம் நடக்க, கணவன் இழந்த செய்தியை மறைக்கும் சுமித்ரா ஒரு கட்டத்துக்குப் பிறகு உண்மையை வெளிப்படுத்துகிறார். சோவின் உதவியால் ஒரு கல்லூரியில் ஆசிரியையாக வேலைக்குப் போகிறார் சுமித்ரா. அங்கே மாணவராக ரஜினி சேர்கிறார். கடைசியில் உடல் நலமின்றி சுமித்ரா இறக்க, ரஜினி அவருக்குக் குங்குமமிட்டுச் சுமங்கலியாக அனுப்பி வைக்கிறார்.

பீம்சிங் இறந்த பிறகு வெளியான இப்படம், அவருடைய மோசமான படங்களில் ஒன்று.