Wednesday, August 2, 2017

குழந்தைக்காக

சோ கௌரவ வேடத்தில் நடித்த முதல் படமிது. பி.மாதவன் இயக்கத்தில் 1968 ஜுனில் வெளியான இந்த வெற்றிப்படம் பாடலாசிரியர் கண்ணதாசனுக்கும் குழந்தை நட்சத்திரம் பேபி ராணிக்கும் தேசிய விருது வாங்கித் தந்தது.

மேஜர் சுந்தர்ராஜன், ராமதாஸ், மனோகர் - இந்த மூவரும்தான் ஹீரோஸ் மற்றும் வில்லன்ஸ். பத்மினியும் பேபி ராணியும் நாயகிகள்.

மூன்று திருடர்கள் பல கொலை கொள்ளைகளில் ஈடுபடுகிறார்கள். ஒரு முறை கொள்ளையடித்த இடத்தில் ஒரு பெண் குழந்தையிடம் மயங்கி, அதைத் தூக்கி வந்து விடுகிறார்கள். அக்குழந்தை மீது உயிரையே வைக்கிறார்கள். அக்குழந்தை ஆயா இல்லாமல் இருக்காது என்பதை அறிந்து ஆயாவான பத்மினியையும் கடத்துகிறார்கள். ஆயா இன்றி குழந்தை தங்களிடம் இருக்கப் பழக்குகிறார்கள். பத்மினியைக் கொல்ல திட்டமிடுகிறார்கள். அதைத் தெரிந்து கொண்ட பத்மினி குழந்தையுடன் தப்பியோட முயல, அவர்கள் துரத்த, அந்தப் போராட்டத்தில் குழந்தை பேச்சு மூச்சின்றி படுத்து விடுகிறது. அதைக் காப்பாற்ற வரும் டாக்டர் போலீசில் ஆஜராக அவர்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே தான் குழந்தையைக் காப்பாற்றுவதாகச் சொல்கிறார். அதற்கு ஒப்புக் கொள்ளும் அம்மூவரும், குழந்தை உயிர் தப்பியதும் மனம் மாறுகிறார்கள். இதற்கிடையே, அவர்களை போலீஸ் சுற்றி வளைக்கிறது. குழந்தைக்காக அவர்கள் கடைசியில் சரணடைவதாகவும், டாக்டர் போலீசுடன் பேசி தினம் அவர்கள் குழந்தையைப் பார்க்க ஏற்பாடு செய்வதாகவும் படம் முடிகிறது.

மிகவும் சுமாரான படம். இது அக்காலத்தில் எப்படி வெற்றி பெற்று பல மொழிகளிலும் ரீ மேக் ஆனதென புரியவில்லை.

நிறைய நட்சத்திரப்  பட்டாளம் - தேங்காய் சீனிவாசன், மனோரமா, தங்கவேலு, பண்டரிபாய், கருணாநிதி, அசோகன், சஹஸ்ரநாமம், பகவதி, மற்றும் பலர். எல்லோரையும் இயக்குனர் வீணடித்து விட்டார்.


சோவுக்கு குடுகுடுப்பைக்காரன் வேடம். பொய் சொல்லி தேங்காய் சீனிவாசன், மனோரமா, தங்கவேலு போன்றோரிடம் பணம் பறித்துச் செல்கிறார். இப்படத்தில் அவர் நடிக்காமலேயே இருந்திருக்கலாம்.

No comments:

Post a Comment