Saturday, October 14, 2017

தாய்க்கு ஒரு பிள்ளை

ஒரு காட்சியில் மகிழ்ச்சியால் சிரிக்கும் ஏழை ஒருவரைப் பார்த்து, கன்னத்தில் போட்டுக் கொண்டு கும்பிடுவார் சோ. அருகிலிருப்பவர் காரணத்தைக் கேட்க, சோ சொல்வார் - "ஏழையின் சிரிப்பில் நான் இறைவனைக் காண்கிறேன்."

இப்படி படத்தில் பல தருணங்களில் சோவின் வசனங்கள் தி.மு.க.வையும் இந்திரா காந்தியையும் தாக்குகின்றன. எம்.ஜி.ஆர். கணக்கு கேட்ட விவகாரம், கருணாநிதி பாணியில் மேடைப் பேச்சு, இந்திரா காந்தி காரணமின்றி மாநில ஆட்சியைக் கலைப்பது என பல அரசியல் சமாச்சாரங்கள் கிண்டலடிக்கப் படுகின்றன. இயக்குனர் பட்டு சோவுக்கு இப்படத்தில் நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார் எனத் தெரிகிறது.

சோவுடைய சொந்த வசனங்களைத் தவிர இப்படத்தில் எதுவுமே ரசிக்கும் படியாக இல்லை. சோ மனோரமா தோன்றும் காட்சிகளும் சுமார் ரகமே. சுமாரான கதை; தொய்வெடுக்கும் திரைக்கதை; சத்தில்லாத வசனங்கள்; மிகையான நடிப்பு; மொத்தத்தில் மோசமான படம்.

ஜெய் ஷங்கர் நாயகன்; அவருடைய வளர்ப்புத் தந்தை ஏ.வி.எம்.ராஜன். பாலாஜியால் வஞ்சிக்கப்பட்ட சாவித்ரிக்குத் தஞ்சம் தருகிறார் ராஜன். அவர்தாம் தம்முடைய தாய் என்ற உண்மை தெரியாமலேயே வளர்கிறார் ஜெய். சாகும் தறுவாயில் ராஜன் உண்மையைச் சொல்ல, தாயை வஞ்சித்த பாலாஜியையும், அதற்கு உதவிய தேங்காய் சீனிவாசனையும் பழி வாங்கப் புறப்படுகிறார் ஜெய். அவருக்கு உதவுகின்றனர் அவருடைய நண்பர்களான சோ, மனோரமா, அவருடைய காதலியும் சீனிவாசனுடைய மகளுமான வெண்ணிறாடை நிர்மலா. பாலாஜியுடைய மகன் சசிகுமாரும் ஒரு வில்லன். முடிவு சுபம். வெற்றி நாயகனுக்கு.

சோவுடைய கதாபாத்திர பெயர் முனியப்பா. மனோரமா அவருக்கு ஜோடி. சோ ஒரு காட்சியில் பெண்பிள்ளை வேடத்திலும் வருகிறார்.  நீலு சோவுடைய தந்தையாக வருகிறார் இப்படத்தில். அவர் வில்லன்களின் கணக்குப் பிள்ளையாக நடித்துள்ளார்.

இப்படம் வெளியான ஆண்டு 1972. பட்டு இயக்கிய படம். 

Sunday, October 8, 2017

உறவுகள் இல்லையடி பாப்பா

சோ எழுதி இயக்கிய இந்நாடகம் 1975யில் முதலில் மேடையேறியது. 1980களின் இறுதியில் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது.

இது அரசியல் நாடகம் இல்லை. பெயருக்குக் கூட அரசியல் பற்றி மறைமுக வசனம் கூட கிடையாது. ஆனால் எப்படி சோவுடைய அரசியல் நாடகங்கள் 50 வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் ஏற்புடையதாக உள்ளனவோ, அதைப் போல இச் சமூக நாடகமும் இன்றைய காலக்கட்டத்துக்கும் பொருந்தக் கூடியதாக உள்ளது.

புண்ணியகோடி என்ற வயோதிகர் வேடத்தில் சோ. அவருடைய மகனாக நீலு; பேரனாக அம்பி. ஒற்றுமையாக இருக்கும் குடும்பத்தில் ஒரு பானை நிறைய தங்கக் காசுகள் கிடைத்தவுடன் அந்த ஒற்றுமை சீர் குலைகிறது. ஒருவர் மற்றவர் மீது சந்தேகம் கொள்கின்றனர்; பரஸ்பரம் துரோகம் செய்ய முயல்கின்றனர். குடும்பத்தில் நடக்கும் சில சாவுகளும் அலட்சியப்படுத்தப் படுகின்றன. கடைசியில் எல்லாருமே இறக்க, சோ பைத்தியம் பிடித்து அலைவதாக நாடகம் முடிகிறது.


பணத்தாசையின் தீமையையும், அதன் அசுர பலத்தையும் சோ நகைச்சுவையாக அதே சமயத்தில் அழுத்தமாகவும் கூறியுள்ளார்.

Wednesday, October 4, 2017

தவப் புதல்வன்

முக்தா சீனிவாசன் இயக்கிய இப்படம் 26 ஆகஸ்ட் 1972யில் வெளியானது. கதாநாயகன் சிவாஜியுடைய நண்பனாக ஜேம்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சோ நடித்துள்ளார். அசட்டுப் பாத்திரம்; மனோரமா ஜோடி. நாயகனுக்கு உதவ சோ போடும் திட்டங்கள் எல்லாம் நாயகனுக்குத் தொல்லைகள் தரும். ரசிக்கும்படியான நகைச்சுவை; ஆனால் சோவின் ஆகச் சிறந்த படம் எனச் சொல்ல முடியாது.


சிவாஜி பணக்காரர். பண்டரிபாயுடைய மகன்; இசைக்கலைஞர். அவருடைய முறைப் பெண் கே.ஆர்.விஜயா. வி.கோபாலகிருஷ்ணன்-காந்திமதி தம்பதியினருடைய மகள்; டாக்டர். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் தறுவாயில் சிவாஜிக்கு மாலைக்கண் நோய் வந்து விடுகிறது. அதை நோயாளியான தாயிடம் இருந்து மறைக்க, அதைப் பயன்படுத்தி ஹோட்டலில் நாட்டியமாடும் சகுந்தலாவும் அவருடைய குடிகார அண்ணன் வாசுவும் சதி செய்கின்றனர். பல சோதனைகளுக்குப் பிறகு சதியிலிருந்தும் நோயிலிலுருந்தும் சிவாஜி விடுபடுவதே மீதி கதை.