Saturday, October 21, 2017

மிஸ்டர் சம்பத்

சோ இயக்கிய படம். ஆர்.கே.நாராயணின் நாவலைத் தழுவி எழுதப்பட்ட கதை. திரைக்கதை வசனமும் சோவுடையவை. இப்படம் 13 ஏப்ரல் 1972யில் வெளியானது.


மற்றவர்களை ஏமாற்றியே வாழும் சோவும், மிகவும் நல்லவரான மேஜர் சுந்தர்ராஜனும் தத்தம் வழியே சிறந்தது எனச் சவாலிட்டுக் கொள்கிறார்கள். ஒரு வருடம் கழித்து தங்கள் தங்கள் வழியிலேயே பயணித்து வாழ்க்கையில் யார் முன்னேறுகிறார்கள் என்பதைப் பார்ப்பதே அந்தச் சவால்.

ஜிப்பா கண்ணாடி அணிந்து கொண்டு, ஒரு வெத்தலைப் பாக்குப் பெட்டியைக் கையில் வைத்துக் கொண்டு, நக்கலாக அனைவரின் பலவீனத்தையும் அறிந்து கொண்டு ஏமாற்றுபவராகக் கலக்கியுள்ளார் சோ. மனோரமா அவருக்கு ஜோடி.

முத்துராமன், ஜெயா, நீலு, பூர்ணம் விஸ்வநாதன், மாலி, வெண்ணிறாடை மூர்த்தி, சுகுமாரி, செந்தாமரை ஆகியோரும் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

வசனங்களும் சோவுடைய அட்டகாசமான நடிப்பும் நாடகப் பாணியில் அமைந்த இப்படத்தின் மிகப் பெரிய பலம். நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். 

புது முக நடிகையான ஜெயாவைத் தமக்குத் தெரியும் என எல்லாரையும் நம்ப வைத்து, இலவசமாக இருக்க இடமும், சாப்பிட உணவும், நல்ல மரியாதையையும் சாமர்த்தியமாக ஏற்படுத்திக் கொள்கிறார் சோ. பிறகு ஜெயாவையும் நம்ப வைத்து, அவருடைய அக்காவான மனோரமாவை மயக்கி, அவர்களை முத்துராமன் இயக்கும் படத்திலிருந்து விலக வைக்கிறார். தம்மை நம்பி ஏமாறும் பூர்ணம் விஸ்வநாதனையும் மாலியையும் வைத்துப் பணத்தைத் தயாரித்து நஷ்டப்பட வைக்கிறார். கடைசியில் செய்யாத குற்றத்துக்குக் கைதாகிச் சிறை செல்கிறார்.




Friday, October 20, 2017

தெய்வ சங்கல்பம்

21 ஜூலை 1972யில் வெளியான இப்படத்தை பி.ஆர்.சோமு இயக்கியுள்ளார். .வி.எம்.ராஜன், விஜயகுமாரி, முத்துராமன், பாலையா, பண்டரிபாய், வி.எஸ்.ராகவன், எஸ்.வரலட்சுமி, ஜி.சகுந்தலா, மேஜர் சுந்தர்ராஜன், சச்சு ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். சோவுக்கு அநாதை ஆசிரம நிர்வாகி வேடம்; மணி என்று பெயர். படம் நன்றாக இல்லாததால் சோவின் நகைச்சுவையும் அவ்வளவாகச் சோபிக்கவில்லை. சச்சு அவருக்கு இணை.

கதை சுமார்; திரைக்கதை சுத்த மோசம். மேஜர் சுந்தர்ராஜனுடைய தங்கையான சகுந்தலாவை ஏமாற்றி விடுகிறார் வி.எஸ்.ராகவன். அதற்குப் பழிவாங்க ஒரு விபத்தில் சுய நினைவின்றி இருக்கும் ஏ.வி.எம்.ராஜனை ராகவன் மகளான விஜயகுமாரிக்குத் தாலி கட்ட வைக்கிறார் மேஜர். கண்கள் கட்டப்பட்டிருந்ததால் தந்தைக்கும் மகளுக்கும் மணாளன் யாரெனத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் குணமாகும் ராஜன் தாம்தான் விஜயகுமாரிக்குத் தாலி கட்டியவர் எனப் பொய் சொல்ல, ஏன் எதற்கு எனக் கேட்காமல் அதை அப்படியே நம்பி விஜயகுமாரி அவர் வீட்டுக்குப் போய் விடுகிறார். பின் அது பொய் எனத் தெரிந்து வெளியேறுகிறார். சில குழப்பங்களுக்குப் பிறகு உண்மை தெரிந்து, பிரிந்தவர்கள் சேர்ந்து, இறந்தவர்களாகத் தெரிந்தவர்கள் உயிருடன் வந்து, எல்லா உண்மைகளும் எல்லாருக்கும் தெரிந்து, கதை சுபமாக முடிகிறது.


சோவின் நகைச்சுவை போல பாலையாவின் நடிப்பும் எடுபடவில்லை. அவர் தம்முடைய அக்காளான வரலட்சுமிக்குப் பயந்தவராக வருகிறார். அவருக்கு இணை பண்டரிபாய்; மகன் ராஜன். அக்காள் மகளாக சச்சு. எல்லா நடிகர்களும் இயக்குனரால் வீணடிக்கப்பட்டுள்ளனர். 

Thursday, October 19, 2017

புகுந்த வீடு

சோவுக்கு இரட்டை வேடம்; அம்பலம் என்ற வேடத்திலும், அவருடைய தந்தையாகவும். தந்தையாக வரும் சோ என்ன காரணத்தினாலோ முழுக்க முழுக்க பாலையாவைப் போல பேசி நடித்துள்ளார். சில காட்சிகளிலேயே இந்தப் பாத்திரம் தோன்றுகிறது. மகன் கேரக்டர் நாட்டுப்புறமாக உள்ள மனைவியை விரும்பாமல், மனைவியே மாடர்ன் உடையணிந்து யாரைப் போலவோ வர, அது தெரியாமல் அவர் மீது சபலப்படும் கேரக்டர்.

பட்டு இயக்கிய படம். படத்தில் திரைக்கதையும் வசனமும் வீக். அதனால் சோ-மனோரமா காம்பினேஷன் ரசிக்கும்படியாக இருந்தாலும் எப்போதும் நினைவு கூரும் வகையில் அமையவில்லை.

நாயகன் ரவிசந்திரன்; அவரைப் பணக்கார ஏ.வி.எம்.ராஜனுடைய தங்கையான லட்சுமி காதலித்து மணம் செய்து கொள்கிறார். ஓர் ஏற்பாட்டின்படி ஏ.வி.எம். ரவிசந்திரன் தங்கையை (சந்திரகலா) மணமுடிக்கிறார். லட்சுமிக்கு சதா இருமும் மாமியாரான சாவித்ரியைக் கண்டால் பிடிக்கவில்லை. அதனால் தம்பதியரிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிகின்றனர். அது ராஜன் தம்பதியருடைய வாழ்க்கையையும் பாதிக்கிறது. கடைசியில் லட்சுமி மனம் திருந்தி எல்லாரும் ஒன்று சேர்கின்றனர். வி.எஸ்.ராகவன், சி.ஐ.டி.சகுந்தலா போன்றோரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள் நிறைவாக நடித்துள்ளனர். ஆனால், சுமாரான பட்டுவின் இயக்கம் படத்தை ரசிக்கும்படி செய்யவில்லை.

இப்படம் வெளியான ஆண்டு 1972.