Saturday, October 21, 2017

மிஸ்டர் சம்பத்

சோ இயக்கிய படம். ஆர்.கே.நாராயணின் நாவலைத் தழுவி எழுதப்பட்ட கதை. திரைக்கதை வசனமும் சோவுடையவை. இப்படம் 13 ஏப்ரல் 1972யில் வெளியானது.


மற்றவர்களை ஏமாற்றியே வாழும் சோவும், மிகவும் நல்லவரான மேஜர் சுந்தர்ராஜனும் தத்தம் வழியே சிறந்தது எனச் சவாலிட்டுக் கொள்கிறார்கள். ஒரு வருடம் கழித்து தங்கள் தங்கள் வழியிலேயே பயணித்து வாழ்க்கையில் யார் முன்னேறுகிறார்கள் என்பதைப் பார்ப்பதே அந்தச் சவால்.

ஜிப்பா கண்ணாடி அணிந்து கொண்டு, ஒரு வெத்தலைப் பாக்குப் பெட்டியைக் கையில் வைத்துக் கொண்டு, நக்கலாக அனைவரின் பலவீனத்தையும் அறிந்து கொண்டு ஏமாற்றுபவராகக் கலக்கியுள்ளார் சோ. மனோரமா அவருக்கு ஜோடி.

முத்துராமன், ஜெயா, நீலு, பூர்ணம் விஸ்வநாதன், மாலி, வெண்ணிறாடை மூர்த்தி, சுகுமாரி, செந்தாமரை ஆகியோரும் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

வசனங்களும் சோவுடைய அட்டகாசமான நடிப்பும் நாடகப் பாணியில் அமைந்த இப்படத்தின் மிகப் பெரிய பலம். நடிகர்கள் அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். 

புது முக நடிகையான ஜெயாவைத் தமக்குத் தெரியும் என எல்லாரையும் நம்ப வைத்து, இலவசமாக இருக்க இடமும், சாப்பிட உணவும், நல்ல மரியாதையையும் சாமர்த்தியமாக ஏற்படுத்திக் கொள்கிறார் சோ. பிறகு ஜெயாவையும் நம்ப வைத்து, அவருடைய அக்காவான மனோரமாவை மயக்கி, அவர்களை முத்துராமன் இயக்கும் படத்திலிருந்து விலக வைக்கிறார். தம்மை நம்பி ஏமாறும் பூர்ணம் விஸ்வநாதனையும் மாலியையும் வைத்துப் பணத்தைத் தயாரித்து நஷ்டப்பட வைக்கிறார். கடைசியில் செய்யாத குற்றத்துக்குக் கைதாகிச் சிறை செல்கிறார்.




No comments:

Post a Comment