Wednesday, March 14, 2018

வாக்குறுதி

மோகன் காந்திராமன் இயக்கிய இப்படம் மிகவும் சுமார் ரகம். 8 செப்டம்பர் 1973யில் வெளியானது. இப்படத்தில் மணிவண்ணன் என்ற கதாபாத்திரத்தில் சோ தோன்றுகிறார். நாயகியுடைய அண்ணன்; மனோரமா ஜோடி. நகைச்சுவை சுமார்தான். ஒரு சில வசனங்கள் மட்டும் நன்றாக உள்ளன.

வி.எஸ்.ராகவனும் மேஜர் சுந்தர்ராஜனும் கள்ளக் கடத்தல்காரர்கள். தம்மைப் பிடிக்க முயலும் இன்ஸ்பெக்டர் அசோகனைச் சுட்டு கொள்கிறார் மேஜர். பதிலுக்குப் போலீஸ் சுட, துப்பாக்கியால் சுடப்படும் ராகவன் தமது மகனை வளர்க்கும்படி மேஜரிடம் வாக்குறுதி வாங்குகிறார். ஆனால் அச்சிறுவனை எங்கோ அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டு, ராகவன் கொடுக்கும் பணத்தில் வேறு ஊருக்குப் போய் பெரிய பணக்காரராகிறார் மேஜர். அவருடைய மனைவி அஞ்சலிதேவி.

நிர்மலாவும் சோவும் மேஜருடைய மக்கள். நிர்மலா கார் மெக்கானிக் ஜெய்சங்கரைக் காதலிக்கிறார். அவர் பிற்பாடு மேஜரிடம் டிரைவராக வேலையில் அமர்கிறார். தாம் தான் ராகவனுடைய மகன் என்றும் அவரைக் கொன்றவனைப் பழி வாங்குவதே தனது லட்சியம் என்கிறார் ஜெய். பெயரை மாற்றி வாழும் மேஜர் இதனால் கலவரமடைகிறார். ஜெய்யைக்  கொலை செய்ய முயற்சிக்கிறார்; ஆனால் முடியவில்லை.

கடைசியில் ராகவன் உயிருடன் திரும்புகிறார். ஜெய். தாம் சி.ஐ.டி. என்றும் உண்மையில் அசோகனுடைய மகன் என்றும் சொல்கிறார். மேஜரைக் கைது செய்கிறார்.

தேங்காய் சீனிவாசனும் படத்தில் உண்டு.

Sunday, March 11, 2018

பெண் என்றால் பெண்

1967யில் வெளியான இப்படம் ஆரூர்தாஸ் இயக்கியது. ஜெமினி கணேசன், விஜயகுமாரி, சரோஜா தேவி, அசோகன், பண்டரி பாய், வி.கே.ராமசாமி, தங்கவேலு ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.

விதி வசத்தால் ஜெமினியைக் காதலிக்கும் விஜயகுமாரி அசோகனை மணப்பதும், அசோகன் காதலிக்கும் சரோஜா தேவி ஜெமினியை மணப்பதும் கதை. தனி ட்ராக்கில் மருந்து விற்பனையாளர்களாக சோவும் தங்கவேலுவும் வருகிறார்கள். கதையும் நன்றாக இல்லை. நகைச்சுவைக் காட்சிகளும் சுவையாக இல்லை. 

Saturday, March 10, 2018

மலை நாட்டு மங்கை

இப்படத்தைப் பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நண்பர்களுக்காக சோ நடித்துக் கொடுத்திருப்பாரென்று. இப்படிப்பட்ட மோசமான படங்களைப் பற்றி, பிற்காலத்தில் யோசித்துப் பார்க்கும் போது நாம் நடிக்காமல் இருந்திருக்கலாமோ எனச் சோ நினைத்திருக்கக் கூடும். பி.சுப்ரமணியம் இயக்கத்தில் 3 செப்டம்பர் 1973யில் வெளிவந்த இப்படம் அறுவையோ அறுவை. சோவுக்கு மிகச் சிறிய வேடம். ராமு என்ற டிரைவர் கேரக்டர். 2-3 காட்சிகளில் உளறுகிறார் - ஒரு பெண்ணிடம் வழிகிறார். அவ்வளவு தான். இப்படி ஒரு படம் சோவுக்குத் தேவையா என நினைக்கத் தோன்றுகிறது.

ஜெமினியும் சசிகுமாரும் நாயகர்கள். விஜஸ்ரீ நாயகி. ஆனந்தன் வில்லன். சுருளி ராஜன், வி.எஸ்.ராகவன் போன்றோரும் படத்தில் உண்டு. காட்டு வாசிகளிடம் சாமியார் போல வேஷமிட்டு ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார் கொள்ளைக்காரரான ஆனந்தன். அவருடைய பிடியிலிருந்து காடு எப்படி தப்பியது என்பதே கதை. ஜெமினி காட்டுவாசியாகவும் சசிகுமார் போலீஸாகவும் நடித்துள்ளனர்.  ஜெமினிக்குத் துணையாக ஒரு யானையும், ஆனந்தனுக்குத் துணையாக ஒரு சிங்கமும் வருகின்றன.