Friday, March 30, 2018

ஸ்கூல் மாஸ்டர்

1958யில்  இதே பெயரில் பி.ஆர்.பந்துலு இயக்கிய கன்னடப் படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பந்துலு இதை இயக்கி 25 அக்டோபர் 1973யில் வெளியிட்டார். 


ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, முத்துராமன், நம்பியார், அசோகன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன், சசிகுமார், ராஜஸ்ரீ ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். 

படம் சோகமயம். ஸ்கூல் ஹெட் மாஸ்டரான ஜெமினி தீக்கிரையான பள்ளிக்கூடத்தை மாணவர்களை வைத்தே மீண்டும் காட்டுகிறார். பணக் கஷ்டத்தின் நடுவில் அவருடைய பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். இவர் ரிட்டயர் ஆனபின் பிள்ளைகள் இவரைக் கவனிக்க மறுக்கிறார்கள். பெண்டாட்டியைப் பிரிந்து அல்லலுறுகிறார். கடைசியில் அவரிடம் படித்த முத்துராமனால் கரையேறுகிறார்.

சென்டிமென்டலான கதையின் ஒரே ஆறுதல் சோவுடைய நகைச்சுவை. சோனாசலம் என்கிற சோ என்பது அவருடைய பாத்திரப் பெயர். ஆசிரியராக வருகிறார். மறைமுகமான அரசியல் தாக்குதல்கள் அவருடைய வசனங்களில் காணப்படுகின்றன. நல்ல ரசிக்கும்படியான நகைச்சுவை.

Wednesday, March 28, 2018

மனிதரில் மாணிக்கம்

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 7 டிசம்பர் 1973யில் வெளிவந்த இப்படத்தில் சோவுக்கு மிகச் சிறிய வேடம். வேலு என்ற கேரக்டர்; ஹீரோவுக்கு நண்பர்; மெட்ராஸ் பாஷை பேசுகிறார். சோ, மனோரமா, சுருளி ராஜன் எனப் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் இப்படம் பெயரளவிலும் நம்மைச் சிரிக்க வைக்கவில்லை. எல்லாரும் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

ஏ.வி.எம்.ராஜன் தான் நாயகன். சிவாஜி முக்கிய பாத்திரத்தில் வருகிறார். அவரும் தமாஷாக நடிக்க முயல்கிறார்; ஆனால் நமக்குத் தான் சிரிப்பு வரவில்லை. நாயகனின் காதலி என்பதால் பிரமீளாவைக் கதாநாயகி எனச் சொல்லலாம். மேஜர் சுந்தர்ராஜன், எம்.என்.ராஜம் எனப் பலரும் படத்தில் உண்டு. வில்லனாக மனோகர்.

மனோகரும் ராஜனும் பெரிய திருடர்கள். போலீஸ்காரர் மேஜர் அவர்களைச் சுற்றி வளைக்கிறார். தப்பிச் செல்லும் ராஜனிடம் சந்தர்ப்பவசமாக மேஜரின் சிறு குழந்தை சிக்கி விடுகிறது. மறைந்து வாழும் ராஜன் அதை வளர்க்கிறார். மனம் திருந்தி நல்ல முறையில் வாழ்கிறார். கடைசியில் வில்லனுடன் சண்டையிட்டு உடல் பலவீனமடைகிறார். ஒரு கட்டத்தில் குழந்தை மேஜரிடம் சென்று சேர்ந்து விடுகிறது. கடைசியில் வில்லன் அதைக் கடத்த ராஜன் அவனிடம் சண்டையிட்டு அதை மீட்கிறார். ஆனால் போலீஸ் அவரைச் சுட்டு வீழ்த்தி விடுகிறது.

சுமாரான கதை; மிகச் சுமாரான திரைக்கதை; உணர்ச்சியைத் தூண்டாத வசனங்களும் காட்சி அமைப்புகளும்; வீணடிக்கப்பட்ட திறமையான நடிகர்கள். நிறைய லாஜிக் ஓட்டை; மொத்தத்தில் இது ஒரு தேவையற்ற படம். 

Monday, March 26, 2018

வாயாடி

ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, வி.கே.ராமசாமி, பூர்ணம் விஸ்வநாதன், மனோகர், கண்ணன், சகஸ்ரநாமம், சுந்தர்ராஜன், மனோரமா, சுகுமாரி, ஏ.சகுந்தலா  ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். மதுரை திருமாறன் இயக்குனர். 13 ஜனவரி 1973யில் வெளியான படமிது.

ஜெய்சங்கரும் சோவும் கல்லூரி நண்பர்கள். இருவருடைய பெயரும் ராஜா. அதைப் பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெறாத ஜெய் சோவுடைய சர்டிபிகேட்டை வைத்து தம்முடைய தந்தையான வி.கே.ராமசாமியை ஏமாற்றுவார். வீட்டில் வேலை செய்யும் கே.ஆர்.விஜயாவைக் காதலித்துக் கைப்பிடிப்பார். மனைவி உதவியில் படித்துப் பட்டம் பெறுவார். ஒரு கொலை கேசில் மாட்டிக் கொள்வார். விஜயா சாமர்த்தியமாக அவர் நிரபராதி என்பதை நிரூபிப்பார்.

சுமாரான படம். சோ நகைச்சுவை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம். அதற்கு மேல் சொல்வதற்கு எதுவுமில்லை.