1968யில் முதலில்
மேடையேறிய இந்த அரசியல் நாடகத்துக்கு
ஈடாக இதற்கு முன்பும் பின்பும்
எந்த நாடகமும் கிடையாது. அந்தக் கால கட்டத்தில்
மேடையேறிய பல நாடகங்களைப் பற்றி
யாருமே அறியாதவாறு இந்த ஒரு நாடகம்
பெரும் வெற்றி பெற்றது. சோ
எழுதி இயக்கிய the best play இது தான். அவர்
எழுதிய ஏனைய பல நல்ல
நாடகங்களை ரசிகர்கள்
மறந்துவிட்டு, சோ என்றாலே துக்ளக்
நினைவுக்கு வரும் அளவுக்கு இது
பிரபலமடைந்தது. சோ பிற்காலத்தில் ஆரம்பித்த
பத்திரிகைக்கு துக்ளக் எனப் பெயரிட
காரணம் இந்நாடகமே.
சஃபையர் தியேட்டரில்
காலை காட்சிகளில் இந்த நாடகம் மேடையேறும்
அளவுக்கும், ஒரே நாளில் மூன்று
வெவ்வேறு சபாக்களில் நான்கு காட்சிகளில் மேடையேறிய
அளவுக்கும் மக்களின் பேராதரவைப் பெற்ற நாடகம் இது.
1969யில் சில
மாற்றங்கள் செய்யப்பட்டன. அதற்குப் பின் எந்த மாற்றமும்
செய்யப்படாத இந்த நாடகத்தை 50 வருடங்கள்
கழித்து இப்போது பார்க்கும் போதும்
நம்மால் இதை ரசிக்க முடிகிறதென்றால்,
இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என நமது
மனத்துக்குப் படுகிறதென்றால் அதற்குக் காரணம் நமது நாட்டில்
அரசியல் நடக்கும் லட்சணமே.
இது
முழுக்க முழுக்க அரசியல் சார்பு
நாடகம். இதில் இடம்பெறும் ஒவ்வொரு
வசனத்தையும் திரும்பத் திரும்பக் கேட்டு நமது நாட்டில்
அரசியல்வாதிகள் இன்னும் திருந்தவில்லையே என
நாம் வேதனைப்படவோ, அந்த வசனங்களில் உள்ள
நகைச்சுவையை ரசிக்கவோ செய்யலாம்.
ஜனாதிபதியின்
லட்சணம், அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம், அவர்கள் பிரச்னை தீர்க்கும்
லட்சணம், பதவிக்காக அலையும் கேவலம், எல்லா
அநீதிகளையும் மறந்து விடும் மக்கள்,
வம்பு பேசும் பெண்கள், நாட்டு
நடப்பைப் பற்றிப் பொழுது
போக்காக மட்டும் பேசும் வேலையில்லாதவர்கள்,
சினிமா பைத்தியம் பிடித்து அலையும் மாணவர்கள், எதற்கெடுத்தாலும்
ஸ்ட்ரைக் செய்யும் கல்லூரி மாணவர்கள் என
மானாவாரியாக எல்லா அவலங்களையும் இலகுவாகவும்
நகைச்சுவையுடன் சாடும் சோவின் மிகச்
சிறந்த நாடகமிது.
பிரதம
மந்திரி துக்ளக் ஹிந்தி பிரச்னையைத்
தீர்ப்பது, மாதத்திற்கு ஒரு மொழியைத் தேசிய
மொழியாக்க யோசனை சொல்வது, பாரசீக
மொழியைத் தேசிய மொழியாக்குவது, எல்லாரையும்
உதவிப் பிரதம மந்திரிகள் ஆக்குவது,
எல்லா இலாக்காக்களையும் தம்மிடமே வைத்துக் கொள்வது, திருப்பதியைத் தமிழ் நாட்டுக்கும், தஞ்சாவூரை
ஆந்திராவுக்கும் கொடுப்பதாகச் சொல்வது, உணவுப் பிரச்னையைத் தீர்க்க
அமெரிக்கா பயணிப்பது என வரிசையாக நம்மை
வயிறு குலுங்கச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சோவின் வசனங்கள்.
No comments:
Post a Comment