Friday, July 28, 2017

நினைவில் நின்றவள்

1967 செப்டம்பரில் வெளியான படம். முக்தா சீனிவாசன் டைரக்டர். திரைக்கதை வசனம் - சோ.

இந்தப் படத்துக்குப் பெயருக்குத் தான் ரவிசந்திரன் நாயகன். இது முழுக்க முழுக்க நாகேஷ் சோவுடன் சேர்ந்து கொட்டமடிக்கும் நகைச்சுவை கலாட்டா. முழு நீள காமெடி படம்.

சோ நடித்த ஆகச் சிறந்த நகைச்சுவைப் படங்களில் இதுவும் ஒன்று. வயதான கேரக்டர். அப்பாவித்தனமும் அசட்டுத்தனமும் நிறைந்த கலகலப்பு கேரக்டர். மனோதத்துவ டாக்டர் சம்பந்தம் எனப் பெயர். மனோரமா ஜோடி. கணவனுக்கு ஏற்ற அசடு.

வி.எஸ். ராகவனுக்கு இரண்டு பெண்கள் - கே.ஆர்.விஜயா மற்றும் சச்சு. விஜயா சோவிடம் வளர்வார். சிறிய விபத்தில் விஜயாவுக்கு அம்னீசியா தாக்கி பழைய சம்பவங்கள் மறந்து விடும். ஊரை விட்டு ஓடி விடுவார். ரவிச்சந்திரனைக் காதலித்து திருமணம் செய்து கொள்வார். ரவிச்சந்திரனின் நண்பன் நாகேஷ்.

பிறகு இன்னொரு விபத்தின் காரணமாக தனது திருமணத்தை மறந்து விடுவார். ராகவன் விஜயாவுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வார். நாகேஷ் மற்றும் ரவிசந்திரன் ராகவனிடமே வேலைக்குச் சேர்வார்கள்.

விஜயாவுக்குப் பார்த்த மாப்பிள்ளை சரியில்லை என்பதால் (அவர் தான் வில்லன்) சோ நாகேஷ் உதவியுடன் அந்த திருமணத்தைத் தடுப்பது தான் கடைசி அரை மணி நேரப் படம்.


நாகேஷ், மனோரமா, சோ ஆகியோர் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அதில் மற்ற நடிகர்களின் நடிப்பு எடுபடாமல் போய் விடுகிறது. பாடல்கள் எல்லாம் சுமார்தான். வீட்டுக்குச் சொந்தக்காரனைப் போல வேஷமிட்டு பலரிடம் வாடகை அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சோவை நாகேஷ் மாட்டி விடும் காட்சி க்ளாஸ்.

No comments:

Post a Comment