Friday, July 28, 2017

நினைவில் நின்றவள்

1967 செப்டம்பரில் வெளியான படம். முக்தா சீனிவாசன் டைரக்டர். திரைக்கதை வசனம் - சோ.

இந்தப் படத்துக்குப் பெயருக்குத் தான் ரவிசந்திரன் நாயகன். இது முழுக்க முழுக்க நாகேஷ் சோவுடன் சேர்ந்து கொட்டமடிக்கும் நகைச்சுவை கலாட்டா. முழு நீள காமெடி படம்.

சோ நடித்த ஆகச் சிறந்த நகைச்சுவைப் படங்களில் இதுவும் ஒன்று. வயதான கேரக்டர். அப்பாவித்தனமும் அசட்டுத்தனமும் நிறைந்த கலகலப்பு கேரக்டர். மனோதத்துவ டாக்டர் சம்பந்தம் எனப் பெயர். மனோரமா ஜோடி. கணவனுக்கு ஏற்ற அசடு.

வி.எஸ். ராகவனுக்கு இரண்டு பெண்கள் - கே.ஆர்.விஜயா மற்றும் சச்சு. விஜயா சோவிடம் வளர்வார். சிறிய விபத்தில் விஜயாவுக்கு அம்னீசியா தாக்கி பழைய சம்பவங்கள் மறந்து விடும். ஊரை விட்டு ஓடி விடுவார். ரவிச்சந்திரனைக் காதலித்து திருமணம் செய்து கொள்வார். ரவிச்சந்திரனின் நண்பன் நாகேஷ்.

பிறகு இன்னொரு விபத்தின் காரணமாக தனது திருமணத்தை மறந்து விடுவார். ராகவன் விஜயாவுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வார். நாகேஷ் மற்றும் ரவிசந்திரன் ராகவனிடமே வேலைக்குச் சேர்வார்கள்.

விஜயாவுக்குப் பார்த்த மாப்பிள்ளை சரியில்லை என்பதால் (அவர் தான் வில்லன்) சோ நாகேஷ் உதவியுடன் அந்த திருமணத்தைத் தடுப்பது தான் கடைசி அரை மணி நேரப் படம்.


நாகேஷ், மனோரமா, சோ ஆகியோர் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அதில் மற்ற நடிகர்களின் நடிப்பு எடுபடாமல் போய் விடுகிறது. பாடல்கள் எல்லாம் சுமார்தான். வீட்டுக்குச் சொந்தக்காரனைப் போல வேஷமிட்டு பலரிடம் வாடகை அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு சோவை நாகேஷ் மாட்டி விடும் காட்சி க்ளாஸ்.

Thursday, July 27, 2017

முகமது பின் துக்ளக்

1968யில் முதலில் மேடையேறிய இந்த அரசியல் நாடகத்துக்கு ஈடாக இதற்கு முன்பும் பின்பும் எந்த நாடகமும் கிடையாது. அந்தக் கால கட்டத்தில் மேடையேறிய பல நாடகங்களைப் பற்றி யாருமே அறியாதவாறு இந்த ஒரு நாடகம் பெரும் வெற்றி பெற்றது. சோ எழுதி இயக்கிய the best play இது தான். அவர் எழுதிய ஏனைய பல நல்ல நாடகங்களை  ரசிகர்கள் மறந்துவிட்டு, சோ என்றாலே துக்ளக் நினைவுக்கு வரும் அளவுக்கு இது பிரபலமடைந்தது. சோ பிற்காலத்தில் ஆரம்பித்த பத்திரிகைக்கு துக்ளக் எனப் பெயரிட காரணம் இந்நாடகமே.

சஃபையர்  தியேட்டரில் காலை காட்சிகளில் இந்த நாடகம் மேடையேறும் அளவுக்கும், ஒரே நாளில் மூன்று வெவ்வேறு சபாக்களில் நான்கு காட்சிகளில் மேடையேறிய அளவுக்கும் மக்களின் பேராதரவைப் பெற்ற நாடகம் இது.

1969யில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதற்குப் பின் எந்த மாற்றமும் செய்யப்படாத இந்த நாடகத்தை 50 வருடங்கள் கழித்து இப்போது பார்க்கும் போதும் நம்மால் இதை ரசிக்க முடிகிறதென்றால், இதில் சொல்லப்பட்ட விஷயங்கள் உண்மை என நமது மனத்துக்குப் படுகிறதென்றால் அதற்குக் காரணம் நமது நாட்டில் அரசியல் நடக்கும் லட்சணமே.

இது முழுக்க முழுக்க அரசியல் சார்பு நாடகம். இதில் இடம்பெறும் ஒவ்வொரு வசனத்தையும் திரும்பத் திரும்பக் கேட்டு நமது நாட்டில் அரசியல்வாதிகள் இன்னும் திருந்தவில்லையே என நாம் வேதனைப்படவோ, அந்த வசனங்களில் உள்ள நகைச்சுவையை ரசிக்கவோ செய்யலாம்.

ஜனாதிபதியின் லட்சணம், அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம், அவர்கள் பிரச்னை தீர்க்கும் லட்சணம், பதவிக்காக அலையும் கேவலம், எல்லா அநீதிகளையும் மறந்து விடும் மக்கள், வம்பு பேசும் பெண்கள், நாட்டு நடப்பைப் பற்றிப்  பொழுது போக்காக மட்டும் பேசும் வேலையில்லாதவர்கள், சினிமா பைத்தியம் பிடித்து அலையும் மாணவர்கள், எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரைக் செய்யும் கல்லூரி மாணவர்கள் என மானாவாரியாக எல்லா அவலங்களையும் இலகுவாகவும் நகைச்சுவையுடன் சாடும் சோவின் மிகச் சிறந்த நாடகமிது.


பிரதம மந்திரி துக்ளக் ஹிந்தி பிரச்னையைத் தீர்ப்பது, மாதத்திற்கு ஒரு மொழியைத் தேசிய மொழியாக்க யோசனை சொல்வது, பாரசீக மொழியைத் தேசிய மொழியாக்குவது, எல்லாரையும் உதவிப் பிரதம மந்திரிகள் ஆக்குவது, எல்லா இலாக்காக்களையும் தம்மிடமே வைத்துக் கொள்வது, திருப்பதியைத் தமிழ் நாட்டுக்கும், தஞ்சாவூரை ஆந்திராவுக்கும் கொடுப்பதாகச் சொல்வது, உணவுப் பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா பயணிப்பது என வரிசையாக நம்மை வயிறு குலுங்கச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சோவின் வசனங்கள். 

Tuesday, July 25, 2017

மனம் ஒரு குரங்கு

1967யில் வெளியான படம். ஏ.டி.கிருஷ்ணஸ்வாமி டைரக்ஷன். செல்லப்பா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சோ. கே.ஆர்.விஜயா கதாநாயகி; நாயகன் ஏ.வி.எம்.ராஜன்.

திரைக்கதை - சோ. சோவுடைய எழுத்தில் ஏற்கனவே சக்கை போடு போட்ட நாடகம்தான் படமாக எடுக்கப்பட்டது. 

டி.எஸ்.பாலையா பணக்காரர்; அவருடைய ஒரே மகன் சோ. இருவரும் திரையில் தோன்றும் காட்சிகள் நமது வயிற்றைக் குலுக்க வைக்கின்றன.
ஏ.வி.எம்.ராஜன் நாடகம் போடுகிறார்; காய்கறிக்காரியாக நடிக்கும் நடிகை கோபித்துக் கொண்டு போய் விட, அவள் இல்லாமலே நாடகத்தை நடத்துவதாகச் சவால் விடுகிறார் ராஜன். உண்மையான காய்கறிக்காரியான  கே.ஆர்.விஜயாவை நாடகத்தில் நடிக்க வைக்கிறார்.

விஜயா நடிப்பைப் பார்க்கும் ராஜனின் நண்பனான சோ விஜயாவைக் காதலிக்கிறார். பாலையா பார்த்து வைக்கும் அவருடைய பணக்கார நண்பருடைய மகளை நிராகரிக்கிறார். விஜயா காய்கறி விற்பவர் எனது தெரிந்த பிறகு, அந்தப் பணக்காரப் பெண்ணையே மணக்க சம்மதிக்கிறார்.

விஜயாவின் நடை உடை பாவனையை மாற்றி, அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய நவநாகரீக நங்கை போல காட்டுகிறார் ராஜன். அவர் திட்டப்படியே சோ மீண்டும் விஜயாவை மணக்க விரும்ப, விஜயா அவரை நிராகரிக்கிறார்.

இன்னும் சில மன மாற்றங்களும் நிராகரிப்புகளும் படத்தில் உண்டு. கடைசியில், விஜயா மனம் மாறி படங்களில் நடிக்கத் தொடங்குகிறார். அவர் மீது உயிரையே வைத்த முத்து ராமன் இதனால் அவரை விட்டுப் பிரிகிறார். ராஜன் மனம் சபலப்பட்டு விஜயாவை மணக்க விரும்புகிறார்; ஆனால் அவரை விஜயா நிராகரிக்கிறார்.

படம் எடுக்கப்பட்ட விதம் பிரமாதம். ராஜன் விஜயாவுக்கு நாகரீகமாக இருக்க கற்றுக் கொடுக்கும் காட்சிகள் மட்டும் சிறிதே நீளம். 'மனம் ஒரு குரங்கு' என்ற பாடலைத் தவிர மற்றவை மனத்தில் நிற்கவில்லை.


சோ படம் முழுவதும் அவ்வப்போது வந்து நம்மை சிரிக்க வைக்கிறார். அவருடைய சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என்பதில் ஐயம் இல்லை.