Sunday, April 16, 2017

Quo Vadis?

டி. கே. சண்முகம் அவர்கள் ஒரு மேடையில் சோ ஆங்கிலத் தலைப்பு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார். இள வயது சோ அப்போது ஏட்டிக்குப் போட்டி என்ற மனோபாவத்தில் இருந்தார். அதனால் அந்த மேடையிலேயே இனி ஆங்கிலத் தலைப்பு வைப்பதில்லை என்று கூறி, தம்முடைய அடுத்த நாடகத்தின் தலைப்பையும் அங்கேயே அறிவித்தார். அது 'கோ வாடிஸ்' என்ற லத்தீன் மொழித் தலைப்பு. அதன் பொருள் 'எங்கே போகிறாய்?'. இது சோ எழுதிய 6ஆவது நாடகம். இது முதலில் அரங்கேறிய ஆண்டு 1962.

ஓர் அரசியல்வாதி, மெட்ராஸ் தமிழ் பேசும் ஒருவன், இரண்டு கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கப்பல் கவிழ்ந்து ஒரு தீவில் கரையேறிவிடுகிறார்கள். அங்கே சோழ வம்சாவளியைச் சேர்ந்த மன்னன் ஆண்டு வருகிறான். அங்கே அவனுடைய ஆட்சியைக் கலைக்க அரசியல்வாதி முயல்கிறான். மன்னன் மகளைக் கவர ஒரு கல்லூரி மாணவன் முயல்கிறான்; லஞ்சம் வாங்கி பணம் சேர்க்க இன்னொருவன் முயல்கிறான். மொத்தத்தில் இவர்கள் வருகையால், அத்தீவில் உள்ள பழந்தமிழர் பண்பாட்டிலும் மொழியிலும் வேறுபாடுகள் வர நிறைய வாய்ப்புகள் தோன்றுகின்றன. அவற்றையெல்லாம் புறக்கணித்து அவர்களை மீண்டும் தமிழ் நாட்டுக்கே அத்தீவு வாசிகள் அனுப்பி விடுகின்றனர். இது தான் கதைச் சுருக்கம்.

இது முழுக்க முழுக்க சோவின் நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த சுவாரசியமான நாடகம். இக்கால தமிழகத்தில் மக்களின் பண்பாட்டையும், அரசியலையும், மொழியையும் ஆசிரியர் கிண்டலடிக்கிறார். காலேஜ் மாணவர்களின் காதல், ஆங்கிலம் கலந்த உரையாடல், அரசியல்வாதிகளின் ஊழல், யாருக்கும் உதவாத பேச்சு, குடியாட்சியின் லட்சணம், சந்தர்ப்பவாதம், என பல விஷயங்களும் நன்றாக விமர்சிக்கப்படுகின்றன. சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் வசனங்கள்.

உதாரணத்துக்கு சில வசனங்கள் -

"நம்ம மெட்றாஸ்ல டாக்டர்ஸ் எல்லாம் இப்போ எவ்வளவு அட்வான்ஸ் ஆயிட்டாங்க"

"டாக்டர்ஸ் என்னத்தை அட்வான்ஸ் ஆனாங்க. கம்பவுண்டர்ஸா  இருக்க வேண்டியவங்கள்லாம் அட்வான்ஸ் ஆயி .டாக்டராயிட்டாங்க."

--------XXXXXXXX----------------

"அவருக்கு கோபமா? போய் விட்டாரே."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. இதோ வந்துடுவார். இதற்குப் பெயர் வாக் அவுட். எங்க எம்.எல்.. எல்லாம் இது மாதிரி அடிக்கடி போயிட்டு உடனே திரும்பி வந்துடுவாங்க - அதுக்குப் பெயர்தான் வாக்கவுட்."

--------XXXXXXXX----------------

" உங்க  ஊர்லேதான் உடம்புக்கு ஒரு வைத்தியர். எங்க ஊர்லே அப்படி இல்லேகாதுக்கு ஒரு வைத்தியர்; கண்ணுக்கு  ஒருத்தர்; பல்லுக்கு ஒரு வைத்தியர். இப்படி பார்ட் பார்ட்டா தான் வைத்தியம் பண்ணுவாங்க."

"ஒரு வைத்தியர் கிட்டப் போனா இன்னொரு வைத்தியர்கிட்ட அனுப்புவாங்க."

"அவர் என்ன செய்வார்?"

"இன்னொருத்தர் கிட்ட அனுப்புவார்."

"இப்படி மாறி மாறி வைத்தியர்களிடம் போய்க் கொண்டிருந்தால்யாருக்கு என்ன லாபம்?"

"எல்லா டாக்டர்களுக்கும் பீஸ் பணம் கிடைக்கும். அதுவுமில்லாமல் இத்தனை வைத்தியர்கள்கிட்டே போய்க் கிட்டே இருந்தா அவங்க இன்ன வியாதின்னு தீர்மானம் பண்றதுக்குள்ளே  ஒண்ணு வியாதி குணமாயி தீர்ந்துடும் - இல்லே ஆளே தீர்ந்துடுவான் - இதுக்கு மிஞ்சி அந்த ஆள் க்ளோஸ் ஆகலைன்னா இவங்க கவனிச்சுப்பாங்க."

--------XXXXXXXX----------------

நீர் தான் இந்த ஊர் எம்.எல்.. - ஆம் மெம்பெர் ஆப் லூனாட்டிக் அஸை லம்.

--------XXXXXXXX----------------

Friday, April 14, 2017

What for?

1962யில் முதலில் மேடையேறிய What for? என்ற நாடகம் சோவுடைய ஐந்தாவது நாடகம். இந்நாடகத்தை இயக்கியவர் கே.பாலசந்தர். சில டைமிங் ஜோக்குகள் நன்றாக இருந்தாலும், கதை, அதுவும் முடிவில் சில காட்சிகள் மிகவும் சுமார் ரகம்.

சுதாகர் என்ற எழுத்தாளன் பானுமதி என்ற பெண் மீது காதல் கொள்கிறான். தனக்குத் திருமணம் நிச்சயம் ஆனதைக் கூறி அவனை நிராகரித்து விடுகிறாள் பானு.

பானுவுக்குக் கல்யாணம் ஆன பிறகு, அவளுடைய கணவனான பசுபதியுடன் அவள் ஊருக்குப் போகும்போது, தான் எழுதிய புத்தகத்தைக் கல்யாண பரிசாகப் பசுபதியிடம் சுதாகர் கொடுக்கிறான். சுதாகருடைய போட்டோகிராபர் நண்பன் கிரி விளையாட்டுத்தனமாக சுதாகரும் பானுவும் சேர்ந்து இருப்பதைப் போன்ற ட்ரிக் படத்தை எடுத்து அதை அந்தப் புத்தகத்தில் வைத்திருப்பான். அது சுதாகருக்குத் தெரியாது.

அந்த படத்தைப் பார்த்து தன்னுடைய மனைவியைத் தவறாக நினைக்கும் சுதாகர், அவளுடன் மனஸ்தாபம் கொள்கிறான். இதை அறியும் சுதாகர் உண்மை என்ன என்பதை நிரூபிக்கும் முயற்சியில் இறந்து போகிறான். ஆனால் கடைசியில் உண்மையை எல்லாரும் தெரிந்து கொள்கின்றனர். பசுபதி பானுவை ஏற்றுக்கொள்ள தீர்மானிக்கிறான். ஆனால் பானு உயிரை விட்டு விடுகிறாள்.

கிரியுடை காதலியாக கிரிஜாவும் அவளுடைய தந்தையாக சார்லியும் நடுநடுவே நகைச்சுவை டிராக்கில் கிரியுடன் தோன்றுகிறார்கள். கடைசி சில காட்சிகளில் நடக்கும் சம்பவங்களில் இவர்களும் இன்னும் சில கதாபாத்திரங்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர்.


தாம் சொல்ல வந்த கருத்தை அழுத்தமாகவோ நம்பும் படியாகவோ சொல்ல தவறி விடுகிறார் கதாசிரியரான சோ.  

Friday, April 7, 2017

Why Not?

1959யில் மேடையேறிய Why Not? சோ எழுதிய மூன்றாவது நாடகம்.

கே.பாலச்சந்தர் இயக்கிய நாடகம். அவருக்குத் தெரியாமல் மேடையில் சோ பல வசனங்களை இணைக்க, அதனாலேயே பாலச்சந்தருக்கு விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் ஒத்துப் போகாமல் ஆனது.

இந்த நாடகத்தில் ஒரு புதுமை. கூடு விட்டு கூடு பாயும் கதை. அது முடியுமா என எல்லா பாத்திரங்களும் சந்தேகப்பட, ஏன் முடியாது என கேட்டுக் கொண்டே பார்வையாளர்களிடமிருந்து ஒரு கதா பாத்திரம் மேடையேறுமாம். பார்வையாளர்கள் ஒரு நிமிடத்துக்கு என்னவென்றே புரியாமல் குழம்பிப் போவார்களாம்.

சோமசேகர் காலேஜ் பிரின்ஸிபால். க்ஷய ரோகத்துக்கும், கூடு விட்டு கூடு பாய்வதற்கும் அவர் மருந்து தாயாரிக்கிறார். அவரைப் பொருளாதார ரீதியில் ஆதரிக்கும் ராஜாபாதர், அவர் கண்டுபிடித்த க்ஷய ரோக மருந்தை வியாபாரமாக்க விரும்புகிறான். ஆனால் சோமசேகர் அதை மக்களுக்குப் பயன்பட வேண்டுமென நினைக்கிறார்.

ராஜாபாதர் பணக்காரர் என்பதால் ராமலிங்கம் தம்முடைய மகள் சரோஜாவை அவருக்குத் திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார் ராமலிங்கம். சரோஜாவோ தம்முடன் படிக்கும் பத்ராசலத்தைக் காதலிக்கிறாள்.

பத்ராசலம், சரோஜா, சோமசேகருடைய மகளான சுலோசனா, வேதா, வாஞ்சி ஆகியோர் சோமசேகர் வேலை செய்யும் கல்லூரியில் ஒன்றாகப் படிக்கிறார்கள். சுலோசனாவும்  ப்ரபசர் மோகனும் பரஸ்பரம் காதலிக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சோமசேகருக்கும் மோகனுக்கும் மனஸ்தாபம் ஏற்படுகிறது. ராஜாபாதரைத் திருமணம் செய்ய விருப்பமில்லாத சரோஜா தற்கொலை செய்து கொள்ள, அவள் உடலில் புகுந்து விடுகிறார் சோமசேகர். இதற்கிடையே சோமசேகரை கொலை செய்ய வரும் ராஜாபாதர், அவர் இறந்து விட்டதாக நினைத்து, அந்தப் பழியை மோகன் மீது போடுகிறார்.

சரோஜா உடலில் இருக்கும் தாம் சோமசேகர் என்பதை நிரூபிக்க எவ்வளவு முயன்றும் சோமசேகரால் முடியவில்லை. யாருமே அவரை நம்பவில்லை. படாத பாடு பட்டு கடைசியில் யார் உண்மையான குற்றவாளி என்பதை போலீசிடம் நிரூபிக்கிறார். ஆனால் சரோஜா உடம்பில் இருக்கும் அவரை ராஜாபாதர் சுட்டு விடுகிறான். மருந்தைக் குடிக்க முயற்சிக்கிறார்; ஆனால் அசட்டுக் கல்லூரி மாணவர்கள் அதைக் கை தவறி உடைத்து விடுகிறார்கள். அவர் இறந்து போகிறார்.


இந்த நாடகத்தில் சோ எந்த கேரக்டரில் நடித்தார் எனத் தெரியவில்லை. அரசியல் கலப்பு இன்றி அதே சமயம் தாம் சொல்ல வரும் கருத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார் சோ. வசனம் தூள். இதை ஏன் சோ மீண்டும் 90களில் மேடையேற்றவில்லையோ