Sunday, April 16, 2017

Quo Vadis?

டி. கே. சண்முகம் அவர்கள் ஒரு மேடையில் சோ ஆங்கிலத் தலைப்பு வைப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார். இள வயது சோ அப்போது ஏட்டிக்குப் போட்டி என்ற மனோபாவத்தில் இருந்தார். அதனால் அந்த மேடையிலேயே இனி ஆங்கிலத் தலைப்பு வைப்பதில்லை என்று கூறி, தம்முடைய அடுத்த நாடகத்தின் தலைப்பையும் அங்கேயே அறிவித்தார். அது 'கோ வாடிஸ்' என்ற லத்தீன் மொழித் தலைப்பு. அதன் பொருள் 'எங்கே போகிறாய்?'. இது சோ எழுதிய 6ஆவது நாடகம். இது முதலில் அரங்கேறிய ஆண்டு 1962.

ஓர் அரசியல்வாதி, மெட்ராஸ் தமிழ் பேசும் ஒருவன், இரண்டு கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கப்பல் கவிழ்ந்து ஒரு தீவில் கரையேறிவிடுகிறார்கள். அங்கே சோழ வம்சாவளியைச் சேர்ந்த மன்னன் ஆண்டு வருகிறான். அங்கே அவனுடைய ஆட்சியைக் கலைக்க அரசியல்வாதி முயல்கிறான். மன்னன் மகளைக் கவர ஒரு கல்லூரி மாணவன் முயல்கிறான்; லஞ்சம் வாங்கி பணம் சேர்க்க இன்னொருவன் முயல்கிறான். மொத்தத்தில் இவர்கள் வருகையால், அத்தீவில் உள்ள பழந்தமிழர் பண்பாட்டிலும் மொழியிலும் வேறுபாடுகள் வர நிறைய வாய்ப்புகள் தோன்றுகின்றன. அவற்றையெல்லாம் புறக்கணித்து அவர்களை மீண்டும் தமிழ் நாட்டுக்கே அத்தீவு வாசிகள் அனுப்பி விடுகின்றனர். இது தான் கதைச் சுருக்கம்.

இது முழுக்க முழுக்க சோவின் நகைச்சுவையும் நையாண்டியும் கலந்த சுவாரசியமான நாடகம். இக்கால தமிழகத்தில் மக்களின் பண்பாட்டையும், அரசியலையும், மொழியையும் ஆசிரியர் கிண்டலடிக்கிறார். காலேஜ் மாணவர்களின் காதல், ஆங்கிலம் கலந்த உரையாடல், அரசியல்வாதிகளின் ஊழல், யாருக்கும் உதவாத பேச்சு, குடியாட்சியின் லட்சணம், சந்தர்ப்பவாதம், என பல விஷயங்களும் நன்றாக விமர்சிக்கப்படுகின்றன. சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் வசனங்கள்.

உதாரணத்துக்கு சில வசனங்கள் -

"நம்ம மெட்றாஸ்ல டாக்டர்ஸ் எல்லாம் இப்போ எவ்வளவு அட்வான்ஸ் ஆயிட்டாங்க"

"டாக்டர்ஸ் என்னத்தை அட்வான்ஸ் ஆனாங்க. கம்பவுண்டர்ஸா  இருக்க வேண்டியவங்கள்லாம் அட்வான்ஸ் ஆயி .டாக்டராயிட்டாங்க."

--------XXXXXXXX----------------

"அவருக்கு கோபமா? போய் விட்டாரே."

"அதெல்லாம் ஒண்ணுமில்லை. இதோ வந்துடுவார். இதற்குப் பெயர் வாக் அவுட். எங்க எம்.எல்.. எல்லாம் இது மாதிரி அடிக்கடி போயிட்டு உடனே திரும்பி வந்துடுவாங்க - அதுக்குப் பெயர்தான் வாக்கவுட்."

--------XXXXXXXX----------------

" உங்க  ஊர்லேதான் உடம்புக்கு ஒரு வைத்தியர். எங்க ஊர்லே அப்படி இல்லேகாதுக்கு ஒரு வைத்தியர்; கண்ணுக்கு  ஒருத்தர்; பல்லுக்கு ஒரு வைத்தியர். இப்படி பார்ட் பார்ட்டா தான் வைத்தியம் பண்ணுவாங்க."

"ஒரு வைத்தியர் கிட்டப் போனா இன்னொரு வைத்தியர்கிட்ட அனுப்புவாங்க."

"அவர் என்ன செய்வார்?"

"இன்னொருத்தர் கிட்ட அனுப்புவார்."

"இப்படி மாறி மாறி வைத்தியர்களிடம் போய்க் கொண்டிருந்தால்யாருக்கு என்ன லாபம்?"

"எல்லா டாக்டர்களுக்கும் பீஸ் பணம் கிடைக்கும். அதுவுமில்லாமல் இத்தனை வைத்தியர்கள்கிட்டே போய்க் கிட்டே இருந்தா அவங்க இன்ன வியாதின்னு தீர்மானம் பண்றதுக்குள்ளே  ஒண்ணு வியாதி குணமாயி தீர்ந்துடும் - இல்லே ஆளே தீர்ந்துடுவான் - இதுக்கு மிஞ்சி அந்த ஆள் க்ளோஸ் ஆகலைன்னா இவங்க கவனிச்சுப்பாங்க."

--------XXXXXXXX----------------

நீர் தான் இந்த ஊர் எம்.எல்.. - ஆம் மெம்பெர் ஆப் லூனாட்டிக் அஸை லம்.

--------XXXXXXXX----------------

No comments:

Post a Comment