Saturday, April 22, 2017

Mind is a Monkey

1963யில் ஸ்ரீதர் இயக்கத்தில் 'தில் ஏக் மந்திர்' என்ற பெயரில் ஒரு ஹிந்தி திரைப்படம் வெளிவந்தது. அந்தத் தலைப்பின் ஸ்கூப்பாக 1963யில் சோ எழுதி இயக்கிய நாடகமான 'தில் ஏக் பந்தர்' என்ற நாடகம் முதலில் மேடையேறியது.

பின்பு, இதே நாடகம் "Mind is a Monkey" என்ற பெயரிலும், "மனம் ஒரு குரங்கு" என்ற பெயரிலும் பல முறை மேடையேறி சக்கை போடு போட்டது. பின்பு, திரைப்படமாகவும் வெளி வந்தது.

செல்லப்பா என்ற பாத்திரத்தில் சோ நடித்துள்ளார். மனிதர்களின் மனம் ஒரு நிலையில்லாதது. மாறிக் கொண்டே இருக்கக்கூடியது என்பதை இந்த நாடகத்தில் நகைச்சுவையாகவும் எளிமையாகவும் சோ விளக்கியிருப்பார்.

மருதாயி என்ற காய்கறி விற்கும் பெண்ணை கோபிநாத் ஒரு நாடகத்தில் நடிக்க வைக்கிறார். அந்த நாடகத்தைப் பார்க்கும் செல்லப்பா அவளையே திருமணம் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் அவள் நடிகையில்லை, காய்கறி விற்பவர் என்பதைத் தெரிந்தவுடன் தமது மனத்தை மாற்றிக் கொள்கிறார்.

மருதாயியை நடை, உடை, பாவனை, பெயர் எல்லாவற்றையும் மாற்றி அவர் ஒரு டாக்டர் எனச் சமுதாயத்தை நம்ப வைக்கிறார் கோபிநாத். மீண்டும் இவள் யாரென தெரியாத செல்லப்பா அவளைக் காதலிப்பதாகச் சொல்கிறார். திட்டம்மிட்டபடி அவரை நிராகரிக்கிறாள் மருதாயி.

இதற்கிடையே செல்லப்பா தம்முடைய தந்தை பார்த்து வைத்த பெண்ணை முதலில் நிராகரித்திருந்தார். அவளை மணக்க இப்போது சம்மதம் தெரிவிக்கிறாள். ஆனால் அவள் இவரை நிராகரித்துவிட்டு, பல நாட்களாகத் தன் பின்னால் சுற்றும் நபரைத் திருமணம் செய்ய சம்மதிக்கிறாள். ஆனால் அதற்குள் அந்த நபர் மனம் மாறி இவளை நிராகரித்து விடுகிறார். வேறு வழியின்றி செல்லப்பாவையே அவள் திருமணம் செய்து கொள்கிறாள்.

மருதாயி சினிமா நடிகை ஆகிறாள். அவள் மனம் மாறி தன்னுடைய பழைய வாழ்கைக்குப் போக மறுக்கிறாள். அவளுடைய பழைய காதலன் அவள் மாறி விட்டாள் என்பதால் அவளை ஏற்க மறுக்கிறான்.

மனத்தில் சூது இல்லாமல் பழகி வந்த கோபிநாத்துக்கு மருதாயி மீது காதல் பிறக்கிறது. ஆனால் அவள் அவரை நிராகரித்து விடுகிறாள்.


நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் பல எதிர்பாரா சம்பவங்களுக்கும் நம்முடைய மனமாற்றமோ அல்லது அடுத்தவரின் மனமாற்றமோ தான் பெரும்பாலும் காரணமாக அமையும். யாரும் எப்படி வேண்டுமானாலும் மனம் மாறலாம் என்பதே யதார்த்தம். அந்த உண்மையை இந்த நாடகம் மிகவும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் வெளிக்காட்டுகிறது.

1 comment: