Wednesday, November 29, 2017

பிரார்த்தனை

2 பிப்ரவரி 1973யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் கௌசிகன். ஏ.வி.எம்.ராஜன், சௌகார் ஜானகி, நிர்மலா, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், ஸ்ரீ காந்த், சசிகுமார் ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.

இப்படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டாததால் மேல் விபரங்கள் தர இயலவில்லை.

Monday, November 27, 2017

பெத்த மனம் பித்து

14 ஜனவரி 1973யில் வெளி வந்த இப்படம் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இரண்டாவது படம்.

எதிலும் கௌரவம் பார்க்கும் பணக்காரரான மேஜர் சுந்தர்ராஜனுடைய மகள் ஜெயா வாட்ச் மேன் முத்துராமனைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். அதனால் அவர்களை ஒதுக்கி வைக்கிறார் மேஜர். கடைசியில் அவருடைய மகன் ஸ்ரீகாந்த் தவறான வழியில் போவதாலும், இன்னொரு மகளுடைய கணவரான வி.கோபாலகிருஷ்ணன் லஞ்சம் வாங்கி சிறைக்குப் போவதாலும், மனம் திருந்துகிறார். ஆனால் அதற்குள் அவருடைய மனைவி சாவித்ரி உயிரை விட்டு விடுகிறார்.

யதார்த்தமான நடிப்பு; நல்ல கதை; சிறந்த திரைக்கதை எனப் படம் நன்றாகவே உள்ளது. மிகச் சிறிய குறைகளே உள்ளன. இப்படத்தில் ஜெயசுதா அறிமுகமானார்.

சோ, சுருளி ராஜன், மனோரமா ஆகியோர் நகைச்சுவைக்கு; நகைச்சுவை சுமார் ரகமே. சோ ஜீப் டிரைவர்; அவருடைய மனைவியாக மனோரமா. 

நல்ல முடிவு

இப்படம் திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய படம். ஒரு படம் எப்படி மோசமாக இயக்கப்படக் கூடாது என்பதை எடுத்தக்காட்டும் விதமாக இப்படத்தைப் பாடத்தில் சேர்க்கலாம்.

23 ஜனவரி 1973யில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் சி.என்.ஷண்முகம். இப்படத்தில் சோவுக்கு பாலு என்ற அசட்டுப் பாத்திரம். தேவையற்ற படம். நகைச்சுவை படத்தைப் போலவே சகிக்கவில்லை. மனோரமா ஜோடி. அவரும் வீணடிக்கப்பட்டுள்ளார்.சோ பெண் வேடமிட்டு தேங்காய் சீனிவாசன் கையால் தாலி கட்டிக்கொள்கிறார். தம்முடைய தம்பிக்கு மகளைத் தர வேண்டுமென முன்பே பேசி வைத்து விடுகிறார். அக்காள், தம்பி இருவருமே சோ தான் எனத் தெரியாமல் தேங்காயும் ஒப்புக் கொள்ள, அவரை ஏமாற்றி மனோரமாவைத் திருமணம் செய்து கொள்கிறார் சோ.

ஜெயந்தி, நிர்மலா இருவரும் சகோதரிகள். நிர்மலாவை மனோகர் மானப்பங்க படுத்த முயலும்போது, அவர் கொல்லப்படுகிறார். அவரை ஜெயந்திதான் கொன்றார் என நினைத்து அவரைப் பிடிக்க போலீஸ் வருகிறது. அவர் நீரில் விழுந்து தப்பிக்கிறார். அவர் இறந்து விட்டார் என எல்லாரும் நினைக்கிறார்கள். தம்முடைய அண்ணனைக் கொன்றவளின் தங்கை வாழ்க்கையைக் கெடுக்க வேண்டுமென்பதற்காக முத்துராமன் நிர்மலாவைத் திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்துகிறார்.

ஜெயந்தி ஜெமினியால் காப்பாற்றப் படுகிறார். வடநாட்டு இளவரசி எனப் பொய் சொல்லி, ஜெமினி அவரைத் திருமணம் செய்து ஊருக்கு கொண்டு வருகிறார். ஜெமினி முதலில் முத்து ராமனையும், பின் ஜெயந்தியையும் கொலையாளி எனச் சந்தேகிக்கிறார். ஜெயந்தி ஜெமினியையும், நிர்மலா முத்துராமனையும், சோ மனோகரின் மனைவியையும் சந்தேகிக்கின்றனர். கடைசியில் பைத்தியமாக வேடமிட்டு அலையும் சுகுமாரியே கொலையாளி எனத் தெரிகிறது.

கொலையாளியைக் கண்டுபிடிக்க கொலை நடந்த இடத்தில் கிடைக்கும் மோதிரத்தை ஊரில் உள்ள ஒவ்வொருவர் கையிலும் மாட்டிப் பார்த்து பொருந்துகிறதா என சோவும் மனோரமாவும் வேவு பார்ப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம். அதைப் போல ஜெமினி முத்துராமனிடம் அவர் கொலையாளியா என வினவ, அவர் மறுத்தவுடன் அதை ஜெமினி நம்பி விடுவார். அதே பாணியில் பல காட்சிகள். எப்படி இவ்வளவு மோசமாக ஒரு இயக்குனரால் படமெடுக்க முடிந்தது. 

Friday, November 10, 2017

தேரோட்டம்

1971யில் வெளியான இப்படத்தை வி.டி.அரசு இயக்கியுள்ளார். ஜெமினி கணேசன், பத்மினி, சிவகுமார், மனோரமா, டைப்பிஸ்ட் கோபு ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார்.  

சீனா தானா என்பது கேரக்டர் பெயர். தெலுங்கும் தமிழும் கலந்த மொழியில் பேசும் வக்கீலாக வருகிறார் சோ. மனோரமா ஜோடி. நகைச்சுவை சுமார் ரகம்தான். 

தரிசனம்

1 பிப்ரவரி 1970யில் வெளியான இப்படத்தை  இயக்கியவர் வி.டி.அரசு. பில்டிங் காண்ட்ராக்டர் நல்லதம்பி என்ற பாத்திரத்தில் சோ தனி காமெடி டிராக்கில் கலக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக மனோரமா. தம்முடைய தங்கைக்குச் சங்கீதம் கற்றுத் தர வரும் மனோரமாவைக் காதலித்து மணமுடித்துக் கொள்கிறார் சோ. அதன்பின் எதற்கெடுத்தாலும் பாட்டு பாடும் மனோரமாவைப் பாடாமல் நிறுத்தி வைக்க அவர் படாத பாடு படுவது சூப்பர் காமெடி. மனோரமாவும் போட்டி போட்டு மிகச் சிறப்பாக நடித்துள்ளார். இவர்கள் இருவரும் தனி டிராக்கில் காமெடி செய்வதே படத்தின் மிகப் பெரிய பலம்.

ஏ.வி.எம்.ராஜன் இரட்டை வேடத்தில் வருகிறார். பெரும்  பணக்காரரான அவர், தம்முடைய கவனமின்மையாலும் நடத்தையாலும் பணம் நஷ்டப்பட்டு அவதிப்படுகிறார். இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். அவருடைய நண்பனான இன்னொரு  ராஜன் அவர் இடத்தில் வந்து, நொடிந்து போன வணிகத்தை நிலை நிறுத்தி, ஊதாரித்தனமாகச் செலவழிக்கும் குடும்பத்தினரைத் திருத்தி, தங்கைக்குத் திருமணமும் செய்து வைக்கிறார். ஓடிப் போன ராஜன் திரும்பி வருகிறார் - மனம் திருந்துகிறார்.

புஷ்பலதா ராஜனுக்கு ஜோடியாகவம், ஸ்ரீகாந்த் அவருக்குத் தம்பியாகவும் நடித்துள்ளனர். 

Sunday, November 5, 2017

டெல்லி மாப்பிள்ளை

13 செப்டம்பர் 1968யில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் தேவன்; தயாரித்தவர் வி.கே.ராமசாமி. சோவுக்கு சின்னத்தம்பி என்ற கதாபாத்திரம். நாயகனுக்கு இணையான பாத்திரம். அசடாக நடித்து மற்றவர்களை வசனங்களால் மடக்கும் சுவாரசியமான கதாபாத்திரம். சோ தோன்றும் காட்சிகளில் கலகலப்புக்குக் குறைவில்லை. சோவுடைய அரசியல் வசனங்கள் இல்லை என்றாலும், அவருடைய நகைச்சுவை சிறப்பாக அமைந்துள்ளது. இது அவருடைய சிறந்த படங்களில் ஒன்று.

பெரும் பணக்காரரான வி.கே.ராமசாமி எதிலும் அந்தஸ்து பார்ப்பவர். அவரைத் திருத்த அவருடைய மகன்களான ரவிச்சந்திரனும் சோவும் முயல்கிறார்கள். வி.கே.ராமசாமியுடைய தங்கை  முத்துலட்சுமி. அவருடைய மகளுடன் ரவிச்சந்திரனுக்குத் திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார் வி.கே. ஆனால் ரவியும் சோவும் சேர்ந்து பல திட்டங்கள் தீட்டி ஆள் மாறாட்டம் செய்து, கடைசியில் முத்துலட்சுமி மகளான சச்சுவை சோவும், முத்துலட்சுமியின் ஏழை தோழியான வரலட்சுமியுடைய மகளான ராஜஸ்ரீயை ரவியும் மனக்கின்றனர். என்ன திட்டங்கள், அதற்குரிய காட்சிகள், ஆள் மாறாட்டம் எல்லாம் நகைச்சுவையாக நகர்கின்றன. சுருளி ராஜனும் அவருக்கு ஜோடியாக மனோரமாவுக்கு சிறு வேடத்தில் நடித்துள்ளனர்.

Saturday, November 4, 2017

கன்னிப் பெண்

செப்டம்பர் 1969யில் வெளியான இப்படத்தை சத்யா மூவிஸ் தயாரித்துள்ளனர். . காசிலிங்கம்  இயக்குனர். ஜெய்சங்கர் நாயகன். வாணிஸ்ரீயும் லட்சுமியும் நாயகிகள். சோ துரைசாமி என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். வில்லன் வி.கே.ராமசாமியுடைய டிரைவர் சோ. வி.கே.ஆருடன் மனோகர், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் எனப் பலரும் இருப்பார்கள். அவர்கள் மிகவும் சீரியஸாக பேசும் போது நடுவில் புகுந்து எதிர் வசனம் பேசி அவர்கள் காலை வருவதே படம் முழுக்க சோவின் வேலை. கடைசியில் வில்லன்களிடம் மாட்டிக் கொள்ளும் சிவகுமாரைக் காப்பாற்ற ஜெய்க்கு சோ உதவுகிறார்.


படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் நிறைய இடங்களில் லாஜிக் இடிக்கிறது. மேஜர் சுந்தரராஜன் நேர்மையான  போலீசுக்காரர். அவர் சுடப்பட்டு இறக்கிறார். அவர் இறக்கும் தறுவாயில் தம்முடைய மகனான ஜெய் போலீசில் சேர வேண்டுமென விருப்பம் தெரிவிக்கிறார். அவர் போலீசில் சேர்ந்ததால் அவருடைய தாய் மாமனான செந்தாமரை அவரைக் காதலிக்கும் தம்முடைய மகளான லட்சுமியை அவருக்குத் திருமணம் செய்து வைக்க மறுக்கிறார். வில்லன் மனோகரிடமிருந்து வாணிஸ்ரீயைக் காப்பாற்றுவதற்காக ஜெய் அவரைத் திருமணம் செய்து கொள்கிறார். மருமகளை மாமியாரான வரலட்சுமி கொடுமைப்படுத்துகிறார். ஜெய்யின் தங்கை நிர்மலா சிவகுமாரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். கோவில் நகைகளைத் திருடும் வி.கே.ஆர். கூட்டத்தாரின் சூழ்ச்சியால் சிவகுமார் கைது செய்யப்படுகிறார். கடைசியில் எல்லா உண்மைகைகளும் வெளியாகி, வில்லன்கள் கம்பியெண்ண, நாயகனும் அவரைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியாக இருக்கும்படி சுபமாக முடிகிறது படம்.