Friday, December 14, 2018

நேர்மை உறங்கும் நேரம்

சோ எழுதிய, இயக்கிய கடைசி நாடகம். 1981யில் மேடையேறியது. முகமது பின் துக்ளக்கைப் போல, முழு அரசியல் நாடகம். 2001யில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இப்படியும் நடக்கலாம் என்ற கற்பனையில் எழுதப்பட்ட நாடகம். அவருடைய கற்பனை பல முறை உண்மையாகிவிட்டது. 2001க்கு முன்பாகவே இந்நாடகத்தில் சொல்லப்படும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக இப்போதும் அவ்வாறே நடக்கின்றன. இதுவும் சோவின் காலத்தால் அழியாத நாடகமாகிவிட்டது.

சிங்காரம் என்கிற ஆளுங்கட்சித் தலைவராக, துணை முதல்வராக சோ பேசும் வசனங்கள் அகதளம். அவருக்குச் சளைக்காமல் முதலமைச்சர் வேடத்தில் வரும் நீலு. முரடனாக அம்பி. மூவரும்  சென்னைத் தமிழில் வெளுத்து வாங்குகிறார்கள். யாராவது கிட்டத்தட்ட அழிந்து விட்ட சென்னைத் தமிழை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் சோவுடைய நாடகங்களை ஆய்வுக்குப் பயன்படுத்தலாம். அவற்றில் இந்த நாடகத்துக்குச் சிறப்பான இடம் உண்டு.

முதல்வர் மின்சாரம் தாக்கி இறந்து போக, அதை மற்றவர்களிடம் இருந்து மறைக்கிறார் சிங்காரம். முதல்வரைப் போலவே தோற்றம் கொண்ட ராஜு என்ற ஆசாமியைப் பழக்கி ஆள் மாறாட்டம் செய்கிறார். சின்னையன் என்கிற முரடன் நடுவில் புகுந்து ராஜூவை மிரட்டி, ஒரு எம்.எல்.ஏ. ஆகி விடுகிறான். அவன் நல்ல பெருமாள் என்கிற கல்லூரிப் பேராசிரியரை முதல்வருக்கு அறிமுகப்படுத்துகிறான். அந்த படித்தவரின் ஆலோசனைகள் மூலம் நாட்டுக்கு சில நல்ல திட்டங்களை அறிவிக்கிறார் முதல்வர். அதைப் பிடிக்காத சிங்காரம் ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறார். பணத்தால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார் முதல்வர். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் போது, தாமே முதல்வராக வேண்டும் எனச் சொல்லி எதிர்க்கட்சித் தலைவர் கவிழ்த்து விடுகிறார். ஆட்சியைக் கலைக்க ஆளுநரிடம் பரிந்துரைக்க எண்ணும் முதல்வர், தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் கல்லூரி ஆசிரியரை முதல்வராகப் பதவி ஏற்று நாட்டுக்கு நல்லது செய்யச் சொல்கிறார். ஆலோசனைகள் மட்டுமே சொல்லிப் பழகி விட்ட அந்த மேதாவி, செயலில் இறங்க தயங்குகிறார்; முதல்வராகும் யோசனையை ஏற்க மறுக்கிறார். அவரைத் திட்டித் தீர்க்கும் முதல்வர் சிங்காரத்திடமே சரணடைகிறார். இருவரும் மீண்டும் இணைகின்றனர். நேர்மை நீண்ட உறக்கம் கொள்கிறது.

டீக்கடையில் அரசியல் வெட்டிப்  பேச்சு பேசுபவர்கள், அரசியல்வாதிகளைத் திட்டித் தீர்த்து அவர்கள் நேரில் வந்தால் வளைந்து கொடுப்பவர்கள், நேர்மையாக இருந்து அரசியலில் சேர்ந்தவுடன் பணத்தாசை கொள்பவர்கள், தினம் பேப்பர் படித்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் நாடு உருப்படாது எனச் சாபமிடுபவர்கள், யார் ஆட்சி செய்கிறார்கள் என்ற சிந்தனை கூட இல்லாமல் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள் என நாம் தினம் தினம் சந்திக்கும் பல மனிதர்களை இந்நாடகத்தில் பாத்திரங்களாக்கி உள்ளார் சோ.

போலியான கடவுள் மறுப்புக் கொள்கை, கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டம், கள்ளச் சாராயப் பிரச்சினை, தாய்க்குலம், உடன் பிறப்பு போன்ற வாசகங்கள், குதிரைப் பந்தைய ஒழிப்பு எனச் சகலத்தையும் கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

நியாயமாக, இந்நாடகத்தில் வரும் ஒவ்வொரு வசனமுமே ரசிக்கத்தக்கது. ஆனால் எல்லாவற்றையுமே இங்கே தொகுக்க முடியாது என்பதால் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ஒரு தொழிலதிபர் அரசியல்வாதியைப் பார்த்து பேசும் வசனங்கள் - "என்ன சார் இது? உங்க வீட்ல நாலு பேர் இருக்காங்க. ரெண்டு ஃபிரிட்ஜ் தான் இருக்குங்கிறீங்க. எப்படி சமாளிக்கிறீங்க? சிம்பிளா இருக்கலாம். அதுக்கு ஒரு லிமிட் இல்லை? ரெண்டே ரெண்டு ஃபிரிட்ஜ் வைச்சுக்கிட்டு சாமியார் மாதிரியா இருக்கறது? "

ஒரு கட்சிக்காரரைப் பார்த்து - "உன் கட்சி பத்திரிகை  தானே? படிக்கிறேன் கேள். புலியே புறப்படு! சிங்கமே ஓடி வா! காளையே எழுந்திரு! இவங்க மனுஷனுக்கு நடத்தலை பத்திரிகை."

"எவனுக்கு ஓட்டு போட்டாலும் வேஸ்ட். இவனுக்கெல்லாம் ஓட்டு போடறதை விட குப்பைத் தொட்டியில் போடலாம். அதாவது ஆட்சிக்கு வந்து நம்மளை தொந்தரவு பண்ணாது."

"கடவுள் நம்பிக்கை இல்லாத சி.எம்.யா நீ. இப்படி முருகா முருகான்னு சொல்லக்கூடாது. அதெல்லாம் பாத்ரூம்லே ரகசியமாச் சொல்லிக்கணும். பப்ளிக் எதிரிலே தாய்தான் தெய்வம்."

"விஞ்ஞானிகள் மாநாடு நேத்து நடந்தது இல்லே? நான்தான் தலைமை வகிச்சேன்...என்னா பேசறதுன்னே புரியலை...கடைசியிலே விஞ்ஞானிங்க சேவை நாட்டுக்குத் தேவை...திருவள்ளுவரே ஒரு விஞ்ஞானிதான்னேன்  திருவள்ளுவரைப் பத்தி நாம என்ன சொன்னாலும் ஓ.கே. தான். திருவள்ளுவர்னா எல்லாரும்  உடனே பயந்து போய் கப்புனு வாயைப் பொத்திக்கிறானுங்க. ஏதோ போனாப் போகுதுன்னு திருவள்ளுவரோடு விட்டேன். விஞ்ஞானிகள் தெருக்கூத்து நடத்தி, அறிவை வளர்க்க வேணும்னு சொல்லலாமான்னு பார்த்தேன்."

Saturday, December 8, 2018

ஜட்ஜ்மென்ட் ரிஸர்வ்ட்

சோ எழுதி இயக்கிய நல்ல நாடகங்களில் ஒன்று. 1977யில் மேடையேறியது. இதை அவருடைய ஆகச் சிறந்த நாடகம் எனச் சொல்ல முடியாது.

ஓர் ஆண் ஒரு பெண்ணைக் கற்பழித்து விடுகிறான். அவனுக்குத் தண்டனை வாங்கித் தர ஒரு சமூகச் சேவகி, ஒரு கல்லூரிப் பேராசிரியர், ஒரு பத்திரிகை ஆசிரியர், ஒரு சினிமா டைரக்டர்  ஆகியோர் முயல்கிறார்கள். அவர்கள் நாடும் வக்கீல் அந்த ஆண் சில ஆண்டுகளுக்கு முன் தம்முடைய பெண்ணின் மானத்தைக் காத்தவன் என்பதால் அவன் இத்தவற்றைச் செய்திருக்க மாட்டான் என நம்புகிறான். ஆனால் அந்த ஆளே குற்றம் செய்ததை ஒப்புக் கொள்கிறான்.

வக்கீலுடைய மகள் குடும்ப மானம் பறி போகும் என்பதால் தந்தை பேச்சைக் கேட்டு குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல மறுத்து விடுகிறாள். அதனால் மனம் வெறுத்துப் போகிறான்  வக்கீல். தவறு செய்திருந்தாலும் அந்த ஆசாமியைக் காப்பாற்ற தீர்மானிக்கும் வக்கீல் சமூகம், பத்திரிகை, சினிமா போன்றவற்றின் மீது பழி சுமத்தி அவனை விடுவிக்க முடிவு செய்கிறான்.

வக்கீல் பிறகு அப்படிச் செய்வது சரியாக இருக்காது எனத் தீர்மானிக்கிறான். இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவனே குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை வாங்குகிறான்.

ராஜ்ய சபா எம்.பி. சீட்டுக்காகச்  சமூகச் சேவை செய்வதாகக் காட்டிக் கொள்கிறாள். இந்தக் கதையை எழுதி பிரசுரித்துப் பணம் பண்ணுகிறார் பத்திரிகையாளர். சினிமா இயக்குனர் இக்கதையைப் படமாக்கி பல லட்சங்கள் சம்பாதிக்கிறார். இப்படி எல்லாருமே பணம் அல்லது பதவிக்காக அப்பெண்ணுக்கு உதவுவதைப் போல நடிக்கிறார்கள். யாருமே அப்பெண்ணின் கதி என்ன என்பதை யோசித்துக் கூட பார்ப்பதில்லை. குற்றம் செய்தவன் பணம் வாங்கிக் கொண்டே (சினிமா இயக்குனரிடமிருந்து) குற்றத்தை ஒப்புக் கொள்கிகிறான். அவன் தப்பித்துக் கொண்டால் கதையில் சாரம் இருக்காது என இயக்குனருக்குப் பயம்.

வக்கீல் குமாஸ்தா ஜெகதீஷாக சோ. நக்கல் பிடித்த கேரக்டர். தம்முடைய நகைச்சுவையான ஆனால் கூரிய வசனங்களால் மற்ற கதாபாத்திரங்களின் அவலங்களைச் சாடுகிறார். இந்த நாடகத்தின் மிகப் பெரிய பலமே சோ பேசும் வசனங்கள். போலியான சமூகச் சேவகர்கள், மற்றவர்களின் துன்பத்தை வெட்கமோ பரிதாபமோ இல்லாமல் பணம் செய்யும் கதாசிரியர்கள் மற்றும் சினிமாக்காரர்கள், தம்முடைய மகன் மாட்டிக் கொண்டாலும் பரவாயில்லை தம்முடைய பெயர் கெடக் கூடாது என நினைக்கும் தந்தைமார்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் சோ இந்நாடகத்தின் மூலம் சாடுகிறார்.

ஆனால் மற்ற பாத்திரங்கள் பேசும் வசனங்கள் சொல்லும்படியாக இல்லை. குறிப்பாக குற்றம் செய்தவனுடைய தந்தை மற்றும் கல்லூரிப் பேராசிரியர் ஆகியோருடைய பாத்திரங்கள் சரியாக அமைக்கப் படவில்லை.

எத்தனை உண்மைச் சம்பவங்கள் கதைகளாகவும் சினிமாவாகவும் வருகின்றன. அவற்றை எழுதுபவர்களுக்கும்  இயக்குபவர்களுக்கும் அச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி அக்கறை இல்லை என்பதே நிதர்சனம். அதைப் போல பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களே காசை வாங்கிக் கொண்டு, அவர்களுடைய கதையை விற்பதையும்  பார்க்கிறோம். 40 ஆண்டுகளுக்குப் பிறகும் சோ எழுதிய இந்நாடககத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ள அவலங்கள் இச்சமூகத்தில் இருப்பது வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரியவை.

Friday, December 7, 2018

காதலா காதலா

1990க்குப் பிறகு நடிக்காமல் இருந்த சோ, திரைத்துறையில் நடந்த சச்சரவில் கமலுக்கு ஆதரவு தெரிவிக்க அவருடைய படத்தில் தாமாகவே சான்ஸ் கேட்டு சோ நடித்த படம். இதுதான் அவர் நடித்த கடைசிப் படம். கெளரவ வேடம்தான். வக்கீல் வரதாச்சாரியாக அவர் தோன்றும் காட்சிகள் கலகல. ஆனால் படம் முழுக்கவே நகைச்சுவை தான் பிரதானம். சோ தோன்றும் காட்சிகளை விட நகைச்சுவையில் பிற நடிகர்கள் கலக்க அவர்களுக்கு நல்ல வாய்ப்பு.

கமல் - பிரபு தேவா கூட்டணியில் உருவான சிறந்த நகைச்சுவைப் படம். கதை என்று பெரிதாக எதுவுமில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன், வடிவேலு, நாகேஷ், கோவை சரளா, செளந்தர்யா, ரம்பா, கிரேசி மோகன், நீலு, மெளலி என அனைவருமே நம்மைச் சிரிக்க வைக்கின்றனர்.

இப்படம் வெளியான தேதி 14 ஏப்ரல் 1998. இயக்கியவர் சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்.

பாலம்

கார்வண்ணன் இயக்கத்தில் 10 மார்ச் 1990யில் வெளியான இப்படத்தில் முரளி, கிட்டி, நம்பியார், செந்தில் போன்றோர் நடித்திருந்தனர். 

தனது குடும்பத்தைச் சின்னாபின்னப்படுத்திய அமைச்சரை நாயகன் ஒரு பாலத்தில் கடத்தி வைத்திருப்பதே கதை. கடைசியில் போலீசாரால் சுட்டு கொல்லப்படும் நாயகன், தான் சாவதற்கு முன்பாக அமைச்சரைச் சுட்டு கொல்கிறான்.

சோ இப்படத்தில் சோவாகவே நடித்துள்ளார். ஒரே காட்சி. நாயகன் ஓர் அமைச்சரைக் கடத்த, அதைப் பற்றி சோவிடம் தொலைக்காட்சியில் கருத்து கேட்க, அவர் தமது சொந்தக் கருத்தைச் சொல்வார். சட்டத்தைக் கையிலெடுப்பது தவறு என்ற ரீதியில் சோவின் கருத்து அமைந்திருக்கும்.இவரைப் போலவே டாக்டர் ராமதாசும் தோன்றி தமது சொந்தக் கருத்தைச் சொல்வார்.

உலகம் பிறந்தது எனக்காக

14 ஏப்ரல் 1990யில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சோ நாயகனுடைய தந்தையாக வருகிறார். அங்குமிங்குமாக அரசியலைத் தாக்குகிறார். மனோரமா ஜோடி. பெரிதாகச் சொல்லும்படி எதுவுமில்லை. சோ இந்த வேடத்துக்குத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம்.

வழக்கமான நாயகன் இரு வேடங்களில் தோன்றி ஆள் மாறாட்டம் செய்யும் மசாலாப் படம். சத்யராஜ், கெளதமி, ரூபிணி, சரண்யா, திலீப், ஸ்ரீவித்யா, கவுண்டமணி, செந்தில், ஜெய்கணேஷ், டிஸ்கோ சாந்தி எனப் படம் முழுக்க நட்சத்திரக் கூட்டம். மிகவும் சுமாரான  படம். 

அதிசயப் பிறவி

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், சோ நடித்திருக்கவில்லை என்றால் ரசிப்பதற்கு எதுவுமே இருந்திருக்காது. சோ தோன்றும் காட்சிகளைத் தவிர படம் சுத்த அறுவை. இப்படத்தின் நாயகன் ரஜினிகாந்த். அவருடைய ரசிகர்களுக்கே இப்படம் பிடிக்கவில்லை என்பதால்தான் வெற்றி பெறவில்லை.

சித்திரகுப்தனின் தவறான கணக்கால் நாயகனின் உயிர் பிரிந்து விட, அதனால் அவன் எம லோகத்தில் அட்டகாசம் செய்கிறான். யமன் அவனுக்குத் துணையாக விசித்திரகுப்தனை அனுப்புகிறான். விசித்திரகுப்தனின் உதவியால் தன்னைப் போலவே உள்ள உருவத்தின் உடலில் நாயகன் புகுந்து விடுகிறான். பின் அதனால் தோன்றும் குழப்பங்களும் அவற்றை எப்படி அவன் சமாளித்தான் என்பதுமே கதை.

எமனாக வினுசக்கரவர்த்தி, சித்திரகுப்தனாக வி.கே.ராமசாமி, விசித்திரகுப்தனாக சோ. காமெடி கலாட்டாவுக்குக் கேட்கவா வேண்டும்? அரசியலை அவ்வப்போது  தாக்கி சோ அகத்தளம் செய்கிறார்.

கனகா, ஷீபா, நாகேஷ், ஜெய்கணேஷ் போன்றோரும் படத்தில் உண்டு. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் இப்படம் 15 ஜூன் 1990யில் வெளிவந்தது. 

குரு சிஷ்யன்

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 13 ஏப்ரல் 1988யில் வெளியான இப்படம் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த நல்ல படம். வில்லன் ரவிச்சந்திரனுடைய பார்ட்னராக சோ தோன்றுகிறார். நகைச்சுவை வில்லன் வேடம் அவருக்கு. எம்.ஜி.ஆர். மறைந்து நான்கு காட்சிகள் தேர்தலில் போட்டியிட்ட நேரம். சோவுக்குச் சொல்லவா வேண்டும்? அரசியலை வெளுத்து வாங்குகிறார். படம் முழுக்க அவர் யோசிக்கும் போது கைகளை உதய சூரியன், இரட்டை இலை மற்றும் கை சின்னங்களைக் காட்டி எதுவும் உருப்படாது என்பதை அவர் பாணியில் சைகை காட்டுவார். அரசியல் புரியும் ரசிகர்கள் இக்காட்சிகளைக் காணும் போதெல்லாம் வயிறு குலுங்கச் சிரிப்பார்கள்.

ரஜினிகாந்த் - பிரபு நாயகர்கள்; வழக்கமான பழி வாங்கும் மசாலாக் கதை; ஆனால் சண்டை, பாடல் காட்சிகளைத் தவிர நகைச்சுவையே பிரதானமாக உள்ளதால் எல்லாரும் விரும்பும் படமாக இது அமைந்து விட்டது. கெளதமி அறிமுகமான படம். சீதா, வினு சக்கரவர்த்தி, பாண்டியன், ராதாரவி, செந்தாமரை, மனோரமா போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் அருமையான பாடல்கள். 

Wednesday, December 5, 2018

ஆனந்த்

சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் 7 ஆகஸ்ட் 1987யில் வெளிவந்த இப்படத்தில் சோ நாயகனுக்கு அப்பாவாக வருகிறார். நகைச்சுவை மற்றும் சீரியஸ் கலந்த வேடம். நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக உள்ளன. அரசியல் சார்ந்த வசனங்களும் உண்டு. அவருக்கு ஜோடியாக செளகார் ஜானகி.

பிரபு பாடகர்; அவரும் ராதாவும் பரஸ்பரம் காதலிக்கின்றனர். ஒரு மொட்டைக் கடிதத்தைப் பார்த்து ராதாவைப் பற்றி பிரபு விசாரிக்கிறார். அதை அறியும் ராதா அவரை விட்டுப் பிரிந்து விடுகிறார். வில்லன் சிவசந்திரனை மணந்து கொள்கிறார். மனம் வாடி எதிலும் பற்றில்லாமல் தவிக்கிறார் பிரபு. சில பல திருப்பங்கள். கடைசியில் வில்லனால் பிரபு கொல்லப்பட, தன்னுடைய கணவனையே கொன்று பழி தீர்த்துக் கொள்கிறார் ராதா.

வெண்ணிறாடை மூர்த்தி, ஒய். ஜி. மகேந்திரன், ஜெயஸ்ரீ போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர். 

Tuesday, December 4, 2018

மனிதன்

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 21 அக்டோபர் 1987யில் வெளிவந்த இப்படத்தில் சோவுக்கு அவர் இஷ்டம் போல அரசியல் பேச நல்ல வாய்ப்பு. அரசியலில் சுயேட்சையாகப் போட்டியிடும் வினு சக்கரவர்த்திக்கு ஓட்டு சேகரிக்கும் கதாபாத்திரம் என்பதால் சோவுடைய அரசியல் காமெடிக்கு இப்படத்தில் பஞ்சமில்லை. அவர் தோன்றும் எல்லாக் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளன. புரோக்கர் பொன்னம்பலம் என்பது அவருடைய கதாபாத்திரப் பெயர்.

அமாவாசையில் பிறந்ததால் திருடன் பட்டம் கட்டப்படும் சிறுவன், சந்தர்ப்ப வசத்தால் கொலைகாரனாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்து வெளியே வருகிறான். பணக்காரப் பெண்ணைக் காதலிக்கிறான்; ஏழைகளுக்கு வக்காலத்து வாங்குகிறான்; வில்லன்களைப் பந்தாடுகிறான். வழக்கமான 80களின் மசாலாப் படம்.

ரஜினிகாந்த், ரூபிணி, சோ, ரகுவரன், விணுசக்கரவர்த்தி, செந்தில், ஜெய் கணேஷ், மாதுரி, ஸ்ரீ வித்யா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில் உள்ளது.

சந்திரபோஸ் இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர். 

Monday, December 3, 2018

இனிய உறவு பூத்தது

1987யில் வெளியான இப்படத்தை  ஸ்ரீதர் இயக்கியிருந்தார்.  பல பெண்கள் பின்னால் சுற்றி அலையும் நாயகனைத் திருமணம் செய்து கொண்டு, அவனைத் திருத்தும் நாயகியின் கதை.


ஸ்ரீதருடைய சுமாரான படங்களில் இதுவும் ஒன்று.

சுரேஷ், நதியா, எஸ்.வி.சேகர், செந்தில், கோவை சரளா போன்றோருடன் சோவும் நடித்திருந்தார்.  கதாநாயகனான சுரேஷுடைய தந்தையாக சோ நடித்துள்ளார். குணச்சித்திரப் பாத்திரம். மருந்துக்குக் கூட நகைச்சுவை வசனமோ சோவின் டிரேட்மார்க் அரசியல் வசனமோ கிடையாது.

சின்னக் குயில் பாடுது

பி.மாதவன் இயக்கத்தில் 1 மே 1987யில் வெளியான படம். சுவாரசியமான கதை, தேர்ந்த திரைக்கதை, நடிகர்களின் சிறப்பான  நடிப்புடன் கூடிய நல்ல படம்.

இப்படத்தில் சோ, ராமசாமி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜோடி கிடையாது. சிறிய வேடம். சிவகுமார் அலுவலகத்தில் வேலை செய்பவராக வருகிறார். நகைச்சுவை நன்றாக இருந்தாலும், ஓரிரண்டு காட்சிகளில் அரசியல் பேசினாலும், இது சோவுடைய பெயர் சொல்லும் படமில்லை. யார் வேண்டுமானாலும் நடித்திருக்கக் கூடிய வேடம்தான்.

மனைவியை இழந்த நாயகன் மகனுக்காக மறுமணம் செய்து கொள்கிறான். ஆனால் அவனுக்கு மணமான விஷயம் பிறகே அவளுக்குத் தெரிய வருகிறது. அவள் கோபித்துக் கொண்டு தாய் வீடு சென்று விட, இருவரையும் சேர்த்து வைக்க பிற கதாபாத்திரங்கள் செய்யும் முயற்சிகள் எப்படி வெற்றி பெறுகின்றன என்பதே மீதிக்  கதை.

பாக்யராஜ் தனி ட்ராக்கில் வருகிறார். தனிக் கதை - அவரே எழுதியுள்ளார்; மூலக் கதையுடன் சற்றும் தொடர்பில்லை. நல்ல கலகலப்பான காட்சிகள்.

சிவகுமார், அம்பிகா, இளவரசி, ஜீவிதா, சோ, மனோரமா, செந்தில், பாக்கியராஜ் போன்ற பெரிய நட்சத்திரப் பட்டாளம் படத்தில் உண்டு. இளையராஜாவின் இசையில் சிறந்த பாடல்களும் உண்டு.