Thursday, September 28, 2017

சங்கே முழங்கு

ப.நீலகண்டன் இயக்கம். 4 பிப்ரவரி 1972 யில் வெளியான படம். சோ எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த கடைசிப்  படம். 1968யில் எம்.ஜி.ஆருடன் முதல் படம். மொத்தம் நான்கு வருடங்களே இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 13 படங்களில் இணைந்துள்ளனர்.

இப்படத்தில் சிந்தாமணி என்ற எம்.ஜி.ஆருடைய நண்பனாக வருகிறார் சோ. மிகச் சில காட்சிகளிலேயே வருகிறார். இதுவும் சோ தவிர்த்திருக்க வேண்டிய படம்.

எம்.ஜி.ஆரும் அவருடைய தங்கையும் அனாதைகள். அவர்களை பணக்காரரான வி.எஸ்.ராகவன் வளர்க்கிறார். அவருடைய மேனேஜர் அசோகன் வக்கீல் வி.கே.ராமசாமியுடன் சேர்ந்து அவரைக் கொன்று விடுகிறார். பழி எம்.ஜி.ஆர். மீது விழுகிறது. அதை அவர் தம்முடைய காதலியான லட்சுமி மற்றும் அவருடைய தந்தை பகவதி உதவியுடன் பொய் என்பதை நிரூபிப்பதே மீதி கதை. வழக்கம் போல காதில் பூவைச் சுற்றும் கதைக்களம்.

Monday, September 25, 2017

இன்பக் கனா ஒன்று கண்டேன்

1971யில் மேடையேறிய இந்நாடகம் சென்னையில் 100 முறைக்கு மேல் மேடையேறியது.

மந்தைவெளி மன்னாரு என்ற கதாபாத்திரம் காணும் பகல் கனவே இந்நாடகத்தின் கதை. ஓர் உலகில் நூறு பேர்; தங்களுக்குள் வேலைகளையும் வசதிகளையும் சரி சமமாகப் பிரித்துக் கொண்டு சமூக வாழ்க்கை வாழ்கின்றனர். அந்த நூறு பேரில் இருவருக்கு மட்டும் கொடுக்க வேலையில்லை. அதனால் அவர்கள் மற்றவர்கள் செய்யும் வேலையைக் கண்காணிக்கும் புது வேலையை உருவாக்குகிறார்கள். யார் அந்தப் பதவியைப் பிடிப்பது என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்படுகிறது. அது தேர்தலில் போய் முடிகிறது. தேர்தலால் ஊழல் உருவாகிறது. தேர்தல் முடிந்து வென்றவனுக்கு உதவியவர்கள் சில சலுகைககளை எதிர்பார்க்கின்றனர். அத்தகைய ஊழலைக் கண்டு பிடிப்பவர்களுக்கும் சலுகைகள் கிடைக்கின்றன. இப்படியே படிப்படியாக குடியாட்சியின் அனைத்துக் கேடுகளும் அறிமுகமாகி, பணமும் புழக்கத்துக்கு வந்து, அடிதடி கொலை என முடிகிறது.


தேர்தல் முறை ஒரு சமூகத்தை எப்படிச் சீரழிக்கிறது என்பதைச் சோ தமது பாணியில் அழகாகக் காண்பிக்கிறார்.

Sunday, September 24, 2017

சூதாட்டம்

1971யில் வெளியாகிய இப்படத்தை இயக்கியவர் மதுரை திருமாறன். ஜெய்சங்கர், கே.ஆர்.விஜயா, முத்துராமன், சுருளிராஜன்  ஆகியோருடன் சோவும் நடித்திருந்தார்.

சோவுடைய ஜோடி மனோரமா; மாமனாராக தேங்காய் சீனிவாசன். மனைவிக்குப் பயந்த கணவனாக சோ. ரசிக்கும்படியான நகைச்சுவை; ஆனால் அரசியல் வசனங்கள் கிடையாது.

சூதாட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை.



Friday, September 22, 2017

ஒரு தாய் மக்கள்

ப.நீலகண்டன் இயக்கிய இப்படம் 9 டிசம்பர் 1971யில் வெளியானது. எம்.ஜி.ஆர். நாயகன்; ஜெயலலிதா நாயகி. முத்துராமனும் நம்பியாரும் வில்லன்கள். பண்டரிபாய், அசோகன், வி.கே.ராமசாமி ஆகியோருடன் சோவும் நடித்துள்ளார். பணக்கார அசோகனிடம் வேலை செய்பவராக வருகிறார் சோ. அவருடைய கேரக்டர் பெயர் சிகாமணி. அவரும் வி.கே.ஆரும் சேர்ந்து ஓரளவு நகைச்சுவையாக நடித்துள்ளனர். ஆனால் இருவருக்குமே அவ்வளவாக வாய்ப்பு இல்லை.

குழந்தைகளாக இருக்கும் போது பிரிந்த சகோதரர்களான எம்.ஜி.ஆரும் முத்துராமனும் பெரியவர்கள் ஆனவுடன் ஒன்று சேர்வதே கதை. இருவரும் ஜெயலலிதாவைக் காதலிப்பதும் அதனால் அவர்களுக்குள் பகை ஏற்படுவதும், பின் வழக்கம் போல் எம்.ஜி.ஆர். வெல்வதும் முத்துராமன் மனம் திருந்துவதுமாக கதை முடிகிறது.

Thursday, September 14, 2017

நீரும் நெருப்பும்

18 அக்டோபர் 1971யில் வெளியான இப்படமும் சோவுக்குத் தேவையில்லாத படம். இதில் கௌரவ வேடம் போல ஒரே காட்சியில் தோன்றுகிறார். எம்.ஜி.ஆர். ஒரு காட்சியில் மேஜிக் செய்வார். அவருடைய உதவியாளராக சோ வருகிறார். இவர் கேரக்டருக்குப் பெயர் கூட கிடையாது.

படம் வழக்கமான . நீலகண்டனின் மசாலாப் படம். பழைய அபூர்வ சகோதரர்கள் படத்தின் ரீமேக். எம்.ஜி.ஆர் ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்குப் பிடிக்க இப்படத்தில் எதுவுமில்லை. எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் அதிகம் என்ற காரணத்தால் படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது.


எம்.ஜி.ஆர். இரு வேடங்கள். ஜெயலலிதா நாயகி. அசோகன் வில்லன். ஆனந்தன் அவருடைய கையாள். மனோகர் எம்.ஜி.ஆரின். காட் ஃபாதர். இதைத் தவிர தேங்காய் சீனிவாசன், மனோரமா, டி.கே.பகவதி என நிறைய நட்சத்திரங்கள். தந்தையைக் கொன்ற வில்லனை இரு சகோதரர்களும் பழி வாங்கும் கதை.

யானை வளர்த்த வானம்பாடி மகன்

22 ஜூலை 1971யில் வெளிவந்த இப்படத்தை பி.சுப்ரமணியம் இயக்கியுள்ளார். தமிழிலும் மலையாளத்திலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட படம் எனத் தெரிகிறது.


ஜெமினியும் ஆனந்தனும் நாயகர்கள். வி.எஸ்.ராகவன், மனோகர், ராஜஸ்ரீ, விஜயநிர்மலா, பேபி ஸ்ரீதேவி  போன்றோர் நடித்திருந்த இப்படத்தில் சோவும் நடித்துள்ளார். முழுக்க முழுக்க காட்டில் நடப்பது போன்ற கதை. நகைச்சுவையும் மிகச் சுமார் ராகம். கதையும் நன்றாகயில்லை. சோ தவிர்த்திருக்க வேண்டிய படம். அவர் வி.எஸ்.ராகவனிடம் வேலை செய்கிறார்; அவர் பெயர் பாலு. ராகவன் குழு தந்தத்துக்காக காட்டுக்கு வருகின்றனர். அவர்களிடம் தந்தம் விற்க ஒப்பந்தம் போடும் மனோகர் வில்லன். அவருடைய சதியால் சில குழப்பங்கள் நடக்க, அவற்றில் வென்று காட்டுவாசிகளின் தலைவனாகிறார் ஜெமினி. அவர் விஜயநிர்மலாவைத் திருமணம் செய்து கொள்கிறார். அவருடைய முயற்சிகளில் உதவும் யானை வளர்த்த ஆனந்தன் ராகவன் மகளான ராஜ்யஸ்ரீயைத் திருமணம் செய்து கொள்கிறார். அவர் படம் முழுக்க ஏதாவது மிருகங்களுடன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். சோவுக்கு  ஜோடி மனோரமா.

Monday, September 11, 2017

ரிக்ஷாக்காரன்

29 மே 1971யில் வெளியான ரிக்ஷாக்காரன் படத்தில் பிச்சுமணி என்ற சபலம் பிடித்த வயதான பிராமணர் வேடம். தேவையில்லாத படம். காட்சிகள் அதிகம் இல்லை. நகைச்சுவையும் சுமார் ரகம் தான். வயதான மேஜர் சுந்தர்ராஜனுக்கே மாமாவாக வருகிறார். முகமது பின் துக்ளக் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த படம் வெளிவந்த சில மாதங்களிலேயே இப்படிப்பட்ட முக்கியத்துவம் இல்லாத படத்தில் நடிப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும் சோ.

எம்.ஜி.ஆர். நாயகன். அவருக்குத் தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம். எம்.கிருஷ்ணன் நாயர் இயக்கம். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அருமையான பாடல்கள். வழக்கமான மசாலாக் கதை. அனாதைப் பெண்ணான மஞ்சுளாவும் ரிக்ஷாக்காரனாக வரும் எம்.ஜி.ஆரும் காதலிக்கிறார்கள். பத்மினியுடைய பெண்தான் மஞ்சுளா என நம்பும்படி கதை நகர்கிறது. கடைசியில் மஞ்சுளா மேஜருடைய மகள் என்ற உண்மை தெரிகிறது. வழக்கம் போல் அசோகன், மனோகர், கண்ணன் என நிறைய வில்லன்கள் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கிப் போகிறார்கள். மேஜர் இறக்க அப்பழி மஞ்சுளா மீது விழ, கடைசியில் யார் உண்மையான குற்றவாளி என்பதை எம்.ஜி.ஆர். கண்டுபிடிக்கிறார். முடிவு சுபம். தேங்காய் சீனிவாசன் தான் முக்கியமான நகைச்சுவை நடிகர். இவரைத் தவிர ஐசரி வேலன், உசிலை மணி, குண்டு கருப்பையா எனப் பலரும் உண்டு. பூர்ணம் விஸ்வநாதன் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.

Thursday, September 7, 2017

முகமது பின் துக்ளக் திரைப்படம்

"முகமது பின் துக்ளக்" திரைப்படத்துக்கு 1971யில் ஆனந்த விகடனில் வந்த விமர்சனம் -

"எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும்; அதையும் நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலித்தனம் வேண்டும்; அதுவும், பிறர் மனம் புண்படாமல் கேலி செய்வதற்குப் பக்குவமான அறிவு வேண்டும்; அத்துடன், சிந்தனையையும் தூண்டுவதற்கு தெளிந்த ஞானம் வேண்டும். இவற்றில் நான்காவது வரிசைக்கு வந்து நிற்கிறார் சோ என்பதற்குச் சாட்சி, முகமது பின் துக்ளக். அரசியலைக் கேலி செய்யத் துணிந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியைத்தான் கேலி செய்ய வரும். ஆனால், ஒரு சமுதாயத்தின் பலவீனத்தையே, கட்சிப் பாகுபாடின்றி, முதிர்ந்த ஞானத்துடன் கேலி செய்திருக்கும் சாமர்த்தியத்தால் முகமது பின் துக்ளக் தரத்தில் உயர்ந்து நிற்கிறான்."

1968யில் மேடையேறி பெரும் வெற்றியடைந்த நாடகத்தின் திரைப்பட ஆக்கமே 5 மார்ச் 1971யில் வெளியான இப்படம். இரு பெரும் திராவிடக் கட்சித் தலைவர்கள் இப்படம் வெளி வருவதை முடிந்த வரை தடுத்தனர் எனக் கேள்வி. முதலில் ஒப்புக்கொண்ட சில நடிகர்கள் பின்பு நடிக்க மறுத்தனர். கேமராமேன்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, 26 முறைகள் மாறினார்கள். மனசாட்சிக்குப் பயந்த எம்.எஸ்.விசுவநாதன் யாருக்கும் பணியாமல் இப்படத்துக்கு இசை அமைத்தார்.  

சென்ஸார் சான்றிதழ் வாங்குவதிலும் சிக்கல். பத்தாயிரம் பேர்களைத் தந்தி கொடுக்க செய்து சான்றிதழ் வாங்கினார் சோ. இருந்தாலும் 22 இடங்களில் வெட்டு. தயாரிப்பாளர் வேண்டுகோளால் சோ அதற்கு மட்டும் ஒப்புக் கொண்டார். 

இப்படம் சோ இயக்கிய முதல் படம். இது சோ நாயகனாக நடித்த முதல் படம். படம் முடியும் தறுவாயில் அவருடைய கேரக்டர் வில்லத்தனமாகவும் மாறும். மஹாதேவன் மற்றும் துக்ளக் என இரு வேடங்கள் சோவுக்கு. கதை வசனமும் சோ.

இப்படத்தின் கதை, வசனம், நையாண்டி, நடிகர்களின் நடிப்பு, அரசியல் கருத்து போன்ற அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே நாடகத்தின் விமர்சனத்தில் எழுதி விட்டேன். அதனால் அவற்றைப் பற்றி மீண்டும் இதில் எழுதப் போவதில்லை.

நாடகத்தை விட படம் சற்று நீளம். இரண்டு தேவையற்ற பாடல்கள் படத்தில் உண்டு. மகாதேவனும் அவருடைய நண்பனும் ஒரு தேசப் பக்தரின் தூண்டுதலாலேயே துக்ளக்காகவும், இபுன் பதூதாவாகவும் வேடம் போடுவதும், அந்த தேசப் பக்தருடைய பேராசை பிடித்த மகளாக மனோரமாவின் காட்சிகளும் நாடகத்தில் கிடையாது. கடைசியில் இபுன் பதூதா மக்களிடம் கல்லடிப்பட்டு இறக்கும் படி துக்ளக் மக்களைத் தூண்டுவதும் படத்தில் வரும் புது காட்சி. சில வசனங்கள் நாடகத்தில் கிடையாது. ஈ.வெ.ராவைப் பற்றியும் வெங்காயத்தைப் பற்றியும் நாடகத்தில் வரும் வசனங்கள் படத்தில் இல்லை.

நாடகத்தில் நடித்த கேரக்டரிலேயே சோ, சுகுமாரி, அம்பி, நீலு ஆகியோர் நடித்துள்ளார்கள். இபுன் பதூதாவாக பீலிசிவம், ஒரு காட்சியில் வெண்ணிறாடை மூர்த்தி, கனமான பாத்திரத்தில் மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். 

தமிழ்த்  திரைப்பட வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான தைரியமான முயற்சி. தமிழில் பார்க்க வேண்டிய நூறு படங்களை வரிசைப்படுத்தினால் இப்படத்துக்கு கண்டிப்பாக ஓரிடம் உண்டு.