Thursday, September 7, 2017

முகமது பின் துக்ளக் திரைப்படம்

"முகமது பின் துக்ளக்" திரைப்படத்துக்கு 1971யில் ஆனந்த விகடனில் வந்த விமர்சனம் -

"எதையும் கேலி செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும்; அதையும் நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலித்தனம் வேண்டும்; அதுவும், பிறர் மனம் புண்படாமல் கேலி செய்வதற்குப் பக்குவமான அறிவு வேண்டும்; அத்துடன், சிந்தனையையும் தூண்டுவதற்கு தெளிந்த ஞானம் வேண்டும். இவற்றில் நான்காவது வரிசைக்கு வந்து நிற்கிறார் சோ என்பதற்குச் சாட்சி, முகமது பின் துக்ளக். அரசியலைக் கேலி செய்யத் துணிந்தவர்களில் பெரும்பாலோருக்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சியைத்தான் கேலி செய்ய வரும். ஆனால், ஒரு சமுதாயத்தின் பலவீனத்தையே, கட்சிப் பாகுபாடின்றி, முதிர்ந்த ஞானத்துடன் கேலி செய்திருக்கும் சாமர்த்தியத்தால் முகமது பின் துக்ளக் தரத்தில் உயர்ந்து நிற்கிறான்."

1968யில் மேடையேறி பெரும் வெற்றியடைந்த நாடகத்தின் திரைப்பட ஆக்கமே 5 மார்ச் 1971யில் வெளியான இப்படம். இரு பெரும் திராவிடக் கட்சித் தலைவர்கள் இப்படம் வெளி வருவதை முடிந்த வரை தடுத்தனர் எனக் கேள்வி. முதலில் ஒப்புக்கொண்ட சில நடிகர்கள் பின்பு நடிக்க மறுத்தனர். கேமராமேன்கள் தொடர்ந்து மிரட்டப்பட்டு, 26 முறைகள் மாறினார்கள். மனசாட்சிக்குப் பயந்த எம்.எஸ்.விசுவநாதன் யாருக்கும் பணியாமல் இப்படத்துக்கு இசை அமைத்தார்.  

சென்ஸார் சான்றிதழ் வாங்குவதிலும் சிக்கல். பத்தாயிரம் பேர்களைத் தந்தி கொடுக்க செய்து சான்றிதழ் வாங்கினார் சோ. இருந்தாலும் 22 இடங்களில் வெட்டு. தயாரிப்பாளர் வேண்டுகோளால் சோ அதற்கு மட்டும் ஒப்புக் கொண்டார். 

இப்படம் சோ இயக்கிய முதல் படம். இது சோ நாயகனாக நடித்த முதல் படம். படம் முடியும் தறுவாயில் அவருடைய கேரக்டர் வில்லத்தனமாகவும் மாறும். மஹாதேவன் மற்றும் துக்ளக் என இரு வேடங்கள் சோவுக்கு. கதை வசனமும் சோ.

இப்படத்தின் கதை, வசனம், நையாண்டி, நடிகர்களின் நடிப்பு, அரசியல் கருத்து போன்ற அனைத்து விஷயங்களையும் ஏற்கனவே நாடகத்தின் விமர்சனத்தில் எழுதி விட்டேன். அதனால் அவற்றைப் பற்றி மீண்டும் இதில் எழுதப் போவதில்லை.

நாடகத்தை விட படம் சற்று நீளம். இரண்டு தேவையற்ற பாடல்கள் படத்தில் உண்டு. மகாதேவனும் அவருடைய நண்பனும் ஒரு தேசப் பக்தரின் தூண்டுதலாலேயே துக்ளக்காகவும், இபுன் பதூதாவாகவும் வேடம் போடுவதும், அந்த தேசப் பக்தருடைய பேராசை பிடித்த மகளாக மனோரமாவின் காட்சிகளும் நாடகத்தில் கிடையாது. கடைசியில் இபுன் பதூதா மக்களிடம் கல்லடிப்பட்டு இறக்கும் படி துக்ளக் மக்களைத் தூண்டுவதும் படத்தில் வரும் புது காட்சி. சில வசனங்கள் நாடகத்தில் கிடையாது. ஈ.வெ.ராவைப் பற்றியும் வெங்காயத்தைப் பற்றியும் நாடகத்தில் வரும் வசனங்கள் படத்தில் இல்லை.

நாடகத்தில் நடித்த கேரக்டரிலேயே சோ, சுகுமாரி, அம்பி, நீலு ஆகியோர் நடித்துள்ளார்கள். இபுன் பதூதாவாக பீலிசிவம், ஒரு காட்சியில் வெண்ணிறாடை மூர்த்தி, கனமான பாத்திரத்தில் மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். 

தமிழ்த்  திரைப்பட வரலாற்றில் இது ஒரு வித்தியாசமான தைரியமான முயற்சி. தமிழில் பார்க்க வேண்டிய நூறு படங்களை வரிசைப்படுத்தினால் இப்படத்துக்கு கண்டிப்பாக ஓரிடம் உண்டு.

No comments:

Post a Comment