Friday, April 20, 2018

பிள்ளை செல்வம்

நவம்பர் 1973யில் வெளியான இப்படம் வி. ராமசந்திர ராவ் என்ற தெலுங்கு இயக்குனரால் இயக்கப்பட்டது. சுமாரான படம். மாஸ்டர் ராமு என்ற குழந்தை நட்சத்திரம் தான் கதாநாயகன்.

1973யில் யாரெல்லாம் பிரபலமாக இருந்தார்களோ அவர்கள் எல்லோருமே இப்படத்தில் நடித்திருப்பர். அவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டம். சோமு என்ற கேரக்டரில் சோ வருகிறார்; வக்கீல் மற்றும் ஜெய்சங்கருடைய நண்பர். ஜோடி மனோரமா. சந்திரபாபு, நாகேஷ், தங்கவேலு, மனோரமா, பகோடா காதர் எனப் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சோவுக்கு மட்டுமே நகைச்சுவைக்கு வாய்ப்பு. சந்திரபாபு இரண்டு காட்சிகளிலும், தங்கவேலு 4-5 காட்சிகளிலும் தோன்றுகின்றனர். நாகேசுக்கு  சீரியஸ் பாத்திரம். மனோரமா நகைச்சுவை எடுபடவில்லை. சோவும் சில காட்சிகளில் தான் வருகிறார் என்றாலும், அவர் தோன்றும் காட்சிகளில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை. "யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப் பட்டு " என 2000 வருடங்களுக்கு முன்பே தம்மைப் பற்றி வள்ளுவர் கூறியுள்ளார் என அவர் பேசும் ஒரு வசனம் ஒரு சாம்பிள்.

ரங்காராவ் தேவிகா தம்பதி மிகப் பெரிய பணக்காரர்கள். ஜெய்சங்கர் ரங்காராவுடைய தம்பி; மனோகர், சுகுமாரி எனப் பலரும் சொந்தக்காரர்கள் என்ற பெயரில் இவர்கள் வீட்டில் குடியிருந்து கொண்டு, இவர்களுக்குக் குழி பறிப்பார்கள். பல வருடங்களுக்குப் பிறகு தேவிகா கருவுற, அவர் கருவைக் களைக்க பல முயற்சிகளை இவர்கள் மேற்கொள்வார்கள். ஆனாலும் குழந்தை பிறந்து விடும். அது தான் மாஸ்டர் ராமு. அக்குழந்தைக்கு பெரும் வியாதி வந்து தாக்க, சிகிச்சைக்காக வெளிநாடு கொண்டு செல்வார் தாய் மாமன் நாகேஷ். வழியில் விமானம் விபத்துக்குள்ளாக நாகேஷ் இறந்து விடுவார். பையன் தனியாகக் காட்டில் மாட்டிக் கொள்வான். அவன் எப்படி தப்பி வந்தான், வஞ்சகர்களின் சூழ்ச்சிகள் எப்படி முறியடிக்கப் பட்டன என்பதே மீதி கதை.

சுகுமாரி வில்லத்தனமான வேடம்; மனோரமாவுக்கு தாய்; வித்தியாசமாக உள்ளது. அசோகன், குமாரி பத்மினி, கண்ணன், வி.எஸ். ராகவன், மேஜர் சுந்தர்ராஜன் எனப் பலரும் நடித்துள்ளனர். ஆனால் யாருக்குமே பெரிதாகத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பில்லை. 

No comments:

Post a Comment