Friday, April 27, 2018

சிவகாமியின் செல்வன்

புகழ் பெற்ற "ஆராதனா" என்ற இந்திப் படத்தின் ரீமேக். 26 ஜனவரி 1974யில் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன்.

சோவுக்கு இதில் சிகாமணி என்ற பாத்திரம். கதாநாயகி வீட்டில் வேலையாளாக வருகிறார். கௌரவ வேடம். நகைச்சுவை சுமார் ரகம்.

விமானப் படையில் வேலை செய்யும் சிவாஜி வாணிஸ்ரீயைக் காதலிக்கிறார். திருமணத்துக்கு முன்பே வாணிஸ்ரீ கர்ப்பம் தரிக்கிறார். ஒரு விபத்தில் சிவாஜி இறந்து விட, அவருடைய கனவான மகனையும் விமானப் படையில் சேர்க்கவேண்டும் என்பதை நிறைவேற்ற வாணிஸ்ரீ பாடுபடுகிறார். மகனை வேறொரு வீட்டில் வளர்க்கும் சூழ்நிலை. ஒரு கட்டத்தில் தம்மிடம் தவறாக நடந்து கொள்ளும் மனோகரை அவருடைய மகனான சிறுவன் கொன்று விடுகிறான். அந்தப் பழியைத் தாமே ஏற்றுக் கொண்டு ஜெயில் சென்று பல வருடங்கள் பின் திரும்புகிறார் வாணிஸ்ரீ. அவர் எப்படி தம்முடைய மகனைச் சந்தித்தார், அவருக்கு வாணிஸ்ரீதாம் தம்முடைய தாய் என்ற உண்மை எப்படி விளங்கியது என்பது மீதி கதை.

வாணிஸ்ரீயுடைய மகனாகவும் சிவாஜியே நடித்துள்ளார். இப்படத்தைப் பொறுத்தவரை வாணிஸ்ரீயுடைய நடிப்புதான் எல்லாரையும்விடச் சிறப்பாக உள்ளது. அவருடைய கதாபாத்திரத்துக்கே முக்கியத்துவம். ஏ.வி.எம்.ராஜன், ஸ்ரீகாந்த், எம்.என்.ராஜம், லதா, ரங்காராவ் போன்றோரும் படத்தில் நடித்துள்ளனர்.

நல்ல படம்; அங்கங்கே சில குறைகளும் உண்டு. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் பாடல்கள் நன்றாக உள்ளன.

No comments:

Post a Comment