Tuesday, November 6, 2018

வந்தே மாதரம்

மஹாத்மா காந்தி, கௌடில்யர், சார்லஸ் டிக்கன்ஸ், பாரதியார், ஆர்யா என்னும் பாஷ்யம் ஆகியோருக்கும் சோ எழுதி இயக்கிய வந்தே மாதரம் என்ற இந்த நாடகத்துக்கும் தொடர்பு உண்டு. அது என்ன எனத் தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்.

1975யில் மேடையேறிய இந்நாடகம் அதற்கு முன்பாகத் துக்ளக் இதழில் தொடர்கதையாக வெளி வந்தது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முன்னுரையில் கௌடில்யரின் அர்த்த சாஸ்திரத்திலிருந்து சம்ஸ்க்ருத வாக்கியங்களும் அதன் மொழிபெயர்ப்பும் இடம் பெறும். அவை அந்த அத்தியாயத்துக்குப் பொருத்தமானதாக இருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வாக்கியங்கள் எதுவுமே கௌடில்யருடையது இல்லை. எல்லாமே சோவின் வார்த்தைகள். அதை தொடர் முடிந்தவுடன் சோ வெளியிட்டார். தாம் சொல்லும் நல்ல விஷயங்களை யாரும் ஏற்றுக் கொள்ளாததால் கௌடில்யர் பெயரில் வெளியிட்டதாக தம்முடைய பாணியில் எழுதியிருந்தார். இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் பல மாதங்களாக வெளிவந்த இந்தத் தொடர் முடியும் வரை இதைப் படித்தவர்கள் யாரும் இந்த வாக்கியங்கள் அர்த்த சாஸ்திரத்தில் கிடையாது என்பதை அறியவில்லை.

பாஸ்கரன் என்ற மிகவும் திமிர் பிடித்த ஆனால் மேதாவியான பாரிஸ்டர் வேடத்தில் சோ. குடிகாரர்; யாரையும் சிறிது கூட மதிக்காதவர்; பணத்தாசை இல்லாதவர்; நல்லவர் எனப் பல கலவைக்குணம் கொண்டவர். சார்லஸ் டிக்கன்ஸின் "டேல் ஆ ஃப் டூ சிட்டீஸ்" என்ற கதையில் தோன்றும் ஸிட்னி கார்ட்டன் என்ற பாத்திரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்தப் பாத்திரம்.

ஆர்யா என்ற பாஷ்யம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். அவர் தீவிரவாதியாக இருந்து காந்தியவாதியாக மாறியவர். அவருடன் சோவுக்கு நட்பு இருந்தது. அவர் கொடுத்த சில தகவல்களின் அடிப்படையில் விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தின் சில இடங்களும், சம்பவங்களும் இந்தக் கதையில் அமைக்கப்பட்டுள்ளன. கதையின் நாயகனும் அவனுடைய நண்பர்களும் முதலில் தீவிரவாதிகளாக இருந்து காந்தியவாதிகளாக மாறுவதும் கவனிக்கத் தகுந்தது. நாயகனுடைய நண்பன் பெயரும் பாஷ்யம்.

கதா நாயகன் சுந்தரம், பாஷ்யம் மற்றும் தமிழ் வாத்தியார் சம்பந்த மூர்த்தி ஆகியோர் பாரதியாரைக் கடற்கரையில் சந்திக்கின்றனர். அவர் மூலம் மேலும் உத்வேகம் அடைவதாக ஓர்  அத்தியாயம். இப்படியாக பாரதியாரையும் தம்முடைய கதையில் ஒரு பாத்திரமாகி விட்டார் சோ.

1910களின் கடைசியில் நகரும் கதைக்களம். ஜனார்த்தனம் என்ற நேர்மையான  போலீஸ் அதிகரியுடைய மகன் சுந்தரம், தன்னுடைய கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கிளம்புகிறான். அதை விரும்பாத அவனுடைய தந்தை அவனைத் தடுத்துப் பார்க்கிறார்; கைது செய்ய முயற்சிக்கிறார்; ஆனால் ஒரு கட்டத்தில் ஆங்கிலேயரின் நன்றிக்கெட்டத் தனத்தால் தற்கொலை செய்து கொள்கிறார்.

 சுந்தரத்துடைய காதலி சுமதி. அவள் மீது ஒரு சமயத்தில் மையல் கொள்ளும் புகழ் பெற்ற குடிகார, திமிர் பிடித்த வக்கீல் பாஸ்கரன் ஒரு முறை ஒரு வழக்கிலிருந்து சுந்தரத்தைக் காப்பாற்றுகிறான்.

சுந்தரமும் நண்பர்களும் குண்டு வைத்து ரயிலைக் கவிழ்க்கின்றனர். அதில் ஆங்கிலேயர்கள் பயணிப்பார்கள் என்பது அவர்களுடைய அனுமானம். ஆனால் இந்தியர்கள் பயணிக்கின்றனர். ரயில் கவிழ்ந்து அவர்கள் அனைவரும் மரணமடைகிறார்கள். சுந்தரம் கைதாகிறான். சுமதிக்காக பாஸ்கரன் சுந்தரத்தை விடுவிக்க வாதாடுகிறான். ஆனால் சுந்தரத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் கேஸ் தோற்று விடுகிறது. முடிவில் சுந்தரத்துக்குப் பதிலாகத் தானே ஆள் மாறாட்டத்தில் சிறை புகுந்து தூக்கு மேடை செல்கிறான் பாஸ்கரன்.

கதையில் இவர்களைத் தவிர பல சுவாரசியமானப் பாத்திரங்களும் உண்டு. ஆங்கிலேயரிடமும் பழகி, சுதந்திரத் தியாகிகளிடமும் பழகி, அங்கிருந்து விஷயங்களை இங்கே கசியவிடும் கலகலப்பான பத்திரிகையாளர் வேணு, அரைகுறை ஆங்கிலத்தில் பேசி நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காண்டிராக்டர் வஜ்ரவேலு போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள்.

பாஸ்கரன் மிகவும் சக்திவாய்ந்த பாத்திரம். கேலி, கிண்டல், நையாண்டி, அலட்சியம், திமிர், குடித்ததால் வரும் தள்ளாட்டம், மற்றவர்களை மரியாதை இன்றிப் பேசுதல் என மிகவும் ரசிக்கத்தக்க வேடம். சோவைத் தவிர யாராலும் நடித்திருக்க முடியாது.

தொடர்கதைக்கும் நாடகத்துக்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. கதையில் பாஸ்கரனும் சுந்தரமும் ஓரளவுக்குப் பார்க்க ஒரே மாதிரி இருக்கிறார்கள்; அதனாலேயே கடைசியில் சிறையில் ஆள் மாறாட்டம் செய்ய முடிகிறது. ஆனால் நாடகத்தில் அப்படி வரவில்லை. நாடகத்தில் பாஸ்கரன் தமிழ் ஆசிரியரிடம் மட்டும் மரியாதையுடன் பேசுகிறான்; இலவச பள்ளிக்கூடம் நடத்த பண உதவி செய்கிறான்; அது மூலக் கதையில் இல்லாதது. நாடகத்தில் தன்னைத் தீயிட்டுக் கொளுத்திக் கொள்கிறான் பாஸ்கரன்; அதனால் போலீசுக்கு யார் இறந்தது எனத் தெரியவில்லை. ஆனால் மூலக்கதையிலோ ஆள் மாறாட்டம் செய்து சுந்தரத்தின் இடத்தில் பாஸ்கரன் தூக்கில் தொங்குகிறான்.

இந்த மேடை நாடகம் திரைக்கதையில் விரிவாக்கம் செய்யப்பட்டு தொலைக்காட்சித் தொடராக 80களில் வந்தது. நாடகமும், தொலைக்காட்சித் தொடரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

நாடகத்தின், குறிப்பாக பாஸ்கரன் பேசும் வசனங்கள் மிகவும் அருமை. உதாரணத்துக்குச் சில -

"உங்களை மாதிரி ஆசாமிகளை விட குடி எவ்வளவோ பெட்டர். குடி உடம்பைத்தான் கெடுக்கும். உங்கள மாதிரி ஆசாமிங்க குடியையே கெடுப்பிங்க."

"மூளையை மறந்து காரியம் பண்ணா அதுக்கு தலையை மறைச்சுதான் ஆகணும்."

"உட்காருங்களேண்டா...தரைதான் விசாலமா இருக்கே...என்ன சாப்பிடறீங்க? குடிக்க விஸ்கியா பிராண்டியா?"

"வெள்ளைக்காரங்களை விட மோசமானவங்க இங்கே நிறைய பேர் இருக்காங்க...நாடு சுதந்திரம் அடைஞ்சா நான் சொல்றது புரியும்."

"யாருக்குமே இடம் கொடுக்காதவங்களுக்காகத் தான் இந்த சமூகம் இடம் கொடுக்கும்."

"ஒரு தேசப் பக்தனுக்கு தேசத்துக்காக உயிர் விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்காக உழைப்பது முக்கியமா? தேசத்திடமிருந்தே விடுதலை வாங்கி சென்று விடுவது முக்கியமா? அல்லது தேசத்துக்கே விடுதலை வாங்கித் தர உழைப்பது முக்கியமா?"



No comments:

Post a Comment