Friday, December 14, 2018

நேர்மை உறங்கும் நேரம்

சோ எழுதிய, இயக்கிய கடைசி நாடகம். 1981யில் மேடையேறியது. முகமது பின் துக்ளக்கைப் போல, முழு அரசியல் நாடகம். 2001யில் ஏதாவது ஒரு மாநிலத்தில் இப்படியும் நடக்கலாம் என்ற கற்பனையில் எழுதப்பட்ட நாடகம். அவருடைய கற்பனை பல முறை உண்மையாகிவிட்டது. 2001க்கு முன்பாகவே இந்நாடகத்தில் சொல்லப்படும் பல சம்பவங்கள் நடந்துள்ளன. துரதிர்ஷ்டவசமாக இப்போதும் அவ்வாறே நடக்கின்றன. இதுவும் சோவின் காலத்தால் அழியாத நாடகமாகிவிட்டது.

சிங்காரம் என்கிற ஆளுங்கட்சித் தலைவராக, துணை முதல்வராக சோ பேசும் வசனங்கள் அகதளம். அவருக்குச் சளைக்காமல் முதலமைச்சர் வேடத்தில் வரும் நீலு. முரடனாக அம்பி. மூவரும்  சென்னைத் தமிழில் வெளுத்து வாங்குகிறார்கள். யாராவது கிட்டத்தட்ட அழிந்து விட்ட சென்னைத் தமிழை ஆராய்ச்சி செய்ய வேண்டுமானால் சோவுடைய நாடகங்களை ஆய்வுக்குப் பயன்படுத்தலாம். அவற்றில் இந்த நாடகத்துக்குச் சிறப்பான இடம் உண்டு.

முதல்வர் மின்சாரம் தாக்கி இறந்து போக, அதை மற்றவர்களிடம் இருந்து மறைக்கிறார் சிங்காரம். முதல்வரைப் போலவே தோற்றம் கொண்ட ராஜு என்ற ஆசாமியைப் பழக்கி ஆள் மாறாட்டம் செய்கிறார். சின்னையன் என்கிற முரடன் நடுவில் புகுந்து ராஜூவை மிரட்டி, ஒரு எம்.எல்.ஏ. ஆகி விடுகிறான். அவன் நல்ல பெருமாள் என்கிற கல்லூரிப் பேராசிரியரை முதல்வருக்கு அறிமுகப்படுத்துகிறான். அந்த படித்தவரின் ஆலோசனைகள் மூலம் நாட்டுக்கு சில நல்ல திட்டங்களை அறிவிக்கிறார் முதல்வர். அதைப் பிடிக்காத சிங்காரம் ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறார். பணத்தால் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார் முதல்வர். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் போது, தாமே முதல்வராக வேண்டும் எனச் சொல்லி எதிர்க்கட்சித் தலைவர் கவிழ்த்து விடுகிறார். ஆட்சியைக் கலைக்க ஆளுநரிடம் பரிந்துரைக்க எண்ணும் முதல்வர், தேர்தலில் நின்று வெற்றி பெற்றால் கல்லூரி ஆசிரியரை முதல்வராகப் பதவி ஏற்று நாட்டுக்கு நல்லது செய்யச் சொல்கிறார். ஆலோசனைகள் மட்டுமே சொல்லிப் பழகி விட்ட அந்த மேதாவி, செயலில் இறங்க தயங்குகிறார்; முதல்வராகும் யோசனையை ஏற்க மறுக்கிறார். அவரைத் திட்டித் தீர்க்கும் முதல்வர் சிங்காரத்திடமே சரணடைகிறார். இருவரும் மீண்டும் இணைகின்றனர். நேர்மை நீண்ட உறக்கம் கொள்கிறது.

டீக்கடையில் அரசியல் வெட்டிப்  பேச்சு பேசுபவர்கள், அரசியல்வாதிகளைத் திட்டித் தீர்த்து அவர்கள் நேரில் வந்தால் வளைந்து கொடுப்பவர்கள், நேர்மையாக இருந்து அரசியலில் சேர்ந்தவுடன் பணத்தாசை கொள்பவர்கள், தினம் பேப்பர் படித்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் நாடு உருப்படாது எனச் சாபமிடுபவர்கள், யார் ஆட்சி செய்கிறார்கள் என்ற சிந்தனை கூட இல்லாமல் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுபவர்கள் என நாம் தினம் தினம் சந்திக்கும் பல மனிதர்களை இந்நாடகத்தில் பாத்திரங்களாக்கி உள்ளார் சோ.

போலியான கடவுள் மறுப்புக் கொள்கை, கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டம், கள்ளச் சாராயப் பிரச்சினை, தாய்க்குலம், உடன் பிறப்பு போன்ற வாசகங்கள், குதிரைப் பந்தைய ஒழிப்பு எனச் சகலத்தையும் கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

நியாயமாக, இந்நாடகத்தில் வரும் ஒவ்வொரு வசனமுமே ரசிக்கத்தக்கது. ஆனால் எல்லாவற்றையுமே இங்கே தொகுக்க முடியாது என்பதால் சிலவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன்.

ஒரு தொழிலதிபர் அரசியல்வாதியைப் பார்த்து பேசும் வசனங்கள் - "என்ன சார் இது? உங்க வீட்ல நாலு பேர் இருக்காங்க. ரெண்டு ஃபிரிட்ஜ் தான் இருக்குங்கிறீங்க. எப்படி சமாளிக்கிறீங்க? சிம்பிளா இருக்கலாம். அதுக்கு ஒரு லிமிட் இல்லை? ரெண்டே ரெண்டு ஃபிரிட்ஜ் வைச்சுக்கிட்டு சாமியார் மாதிரியா இருக்கறது? "

ஒரு கட்சிக்காரரைப் பார்த்து - "உன் கட்சி பத்திரிகை  தானே? படிக்கிறேன் கேள். புலியே புறப்படு! சிங்கமே ஓடி வா! காளையே எழுந்திரு! இவங்க மனுஷனுக்கு நடத்தலை பத்திரிகை."

"எவனுக்கு ஓட்டு போட்டாலும் வேஸ்ட். இவனுக்கெல்லாம் ஓட்டு போடறதை விட குப்பைத் தொட்டியில் போடலாம். அதாவது ஆட்சிக்கு வந்து நம்மளை தொந்தரவு பண்ணாது."

"கடவுள் நம்பிக்கை இல்லாத சி.எம்.யா நீ. இப்படி முருகா முருகான்னு சொல்லக்கூடாது. அதெல்லாம் பாத்ரூம்லே ரகசியமாச் சொல்லிக்கணும். பப்ளிக் எதிரிலே தாய்தான் தெய்வம்."

"விஞ்ஞானிகள் மாநாடு நேத்து நடந்தது இல்லே? நான்தான் தலைமை வகிச்சேன்...என்னா பேசறதுன்னே புரியலை...கடைசியிலே விஞ்ஞானிங்க சேவை நாட்டுக்குத் தேவை...திருவள்ளுவரே ஒரு விஞ்ஞானிதான்னேன்  திருவள்ளுவரைப் பத்தி நாம என்ன சொன்னாலும் ஓ.கே. தான். திருவள்ளுவர்னா எல்லாரும்  உடனே பயந்து போய் கப்புனு வாயைப் பொத்திக்கிறானுங்க. ஏதோ போனாப் போகுதுன்னு திருவள்ளுவரோடு விட்டேன். விஞ்ஞானிகள் தெருக்கூத்து நடத்தி, அறிவை வளர்க்க வேணும்னு சொல்லலாமான்னு பார்த்தேன்."

No comments:

Post a Comment