Sunday, June 24, 2018

சினிமாப் பைத்தியம்

31 ஜனவரி 1975யில் வெளியான இப்படத்தை இயக்கியவர் முக்தா சீனிவாசன். ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக். சுவாரசியமான படம். சினிமா பைத்தியம் பிடித்து அலையக் கூடாது என்பதையும், சினிமா நடிகர்கள் எதையும் மிகைப்படுத்தி செய்வார்கள் என்பதையும் எடுத்துரைக்கும் படம். ஜெய்சங்கர் நாயகனாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் தம்முடைய இமேஜைப் பற்றி சற்றும் கவலையில்லாமல் நடிகர் ஜெய்சங்கராகவே நடித்துள்ளார். அவரை விட வில்லன் நடிகர் பலசாலி, அவரை விட ஒரு துணை நடிகர் நல்ல உடல்கட்டு உடையவர், அவர் 500 ரூபாய் தர்மம் செய்தால் அவருடைய உதவியாளர் அவர் ஐயாயிரம் உதவி செய்ததாக செய்தி வெளியிடுவது, தம்முடைய மகளுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு உதவி கேட்டு வரும் பெண்ணுக்குப் புத்திமதி கூறி ஊர் போய்ச் சேர பணம் கொடுத்தனுப்புவது எனப் பல காட்சிகள். அவரைத் தவிர கண்டிப்பாக எந்த நடிகரும் இப்பத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்க மாட்டார்கள். அவர் உண்மையில் பாராட்டுக்குரியவர்.

ஜெய்சங்கர் மீது உயிர் விடுமளவு ரசிகையான ஜெயசித்ரா தம்முடைய முறைப் பையனான கமலைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஜெய்யையே மணம் செய்ய கனவு காண்கிறார். சினிமா உலகம் உண்மையில்லை என்பதை ஜெய் அவருக்குப் புரிய வைப்பதே கதை.

சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பாலாஜி, பி.மாதவன் உட்பட பலர் கௌரவ நடிகர்களாக நடித்துள்ளனர். இவர்களைத் தவிர மேஜர் சுந்தர்ராஜன், சௌகார் ஜானகி, சச்சு, மனோரமா, வி.கே.ராமசாமி போன்றோரும் நடித்துள்ளனர்.

சோ ரமணி என்ற கேரக்டரில் ஜெய்க்கு உதவியாளராக வருகிறார். சற்றும் அலட்டிக் கொள்ளாத பாத்திரம். கலகலப்புக்குச்  சற்றும் பஞ்சமில்லை. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஜெய்க்கு இவர் விளம்பரம் தேடித் தருவது நல்ல வேடிக்கை. கமலுடன் சோ நடித்த முதல் படமிது.

No comments:

Post a Comment