Friday, June 22, 2018

உண்மையே உன் விலை என்ன?

சோ என்றால் எல்லாருக்கும் அவருடைய துக்ளக் இதழும், அரசியல் நையாண்டி விமர்சனங்களும், புகழ் பெற்ற "முகமது பின் துக்ளக்"  நாடகமுமே நினைவுக்கு வரும். ஆனால் அவர் அரசியல் சார்பில்லாத சிறந்த நாடகங்களையும் எழுதியுள்ளார். அதற்குச் சிறந்த உதாரணம் "உண்மையே உன் விலை என்ன?". இத்தனைக்கும் இந்த நாடகம் 1974யில், அவர் அரசியலில் மிகவும் ஆழ்ந்து ஈடுபட்டிருந்த காலத்தில் மேடையேறிய நாடகம். ஆனால் இதில் பெயருக்குக் கூட அரசியல் விமர்சனம் இல்லை.

இந்த நாடகம் நமது சிந்தனையைத் தூண்ட கூடியது. உண்மையை விலைக்கு வாங்க முடியுமா? முடியலாம். ஆனால் எல்லாரையுமே பணத்தால் வாங்க முடியுமா? தேவையில்லை. உண்மையின் விலை பணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை; அது பதவியாகவோ, வேலை வாய்ப்பாகவோ ஏன் மத நம்பிக்கையாகக் கூட இருக்க முடியும். ஒவ்வொருவரைப் பொறுத்து, உண்மையின் விலை மாறுபடலாம். அது தான் இந்த நாடகத்தின் சாராம்சம். ஆனால் முடிவில் உண்மையின் விலையாக ஒரு நல்லவர் உயிரை விட்டு, உண்மையை நிலை நாட்டுகிறார்.

ஒரு பாதிரியார்; அவரிடம் பாவ மன்னிப்பு கோர ஒருவன் வருகிறான். ஒரு பெண்ணின் கற்பைக் காப்பாற்ற அவன் செய்த கொலை தவறில்லை எனக் கருதும் பாதிரியார் அவனை மறைத்து வைக்கிறார். ஆனால் எப்போதும் உண்மை மட்டுமே பேசுகிறார்; அதனால் போலீசில் மாட்டிக் கொள்கிறார். அவரை விடுவிக்க ஒரு வக்கீல் வருகிறார். பொய் பேச மறுத்து, அந்த வக்கீலுக்கும் பெரிதாகப் பாதிரியார் ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உண்மை என்ன என்பதற்கு சில சாட்சிகளும் ஆவணங்களும் கிடைக்கின்றன. கொல்லப்பட்டவனுடைய தந்தை அரசியல்வாதி. அவர் எல்லாரையும் விலை பேசி உண்மையை வாங்கி விடுகிறார். பாதிரியாருக்கு உதவியாக இருந்த வக்கீல், நண்பர், பாதிக்கப்பட்ட பெண் என எல்லாருமே விலை போகிறார்கள். ஆனால் கடைசியில் வேறு ரூபத்தில் உண்மை வெளிவருகிறது. அதை ஊருக்கு எல்லாம் தெரிய வாய்த்து அரசியல்வாதியின் கையால் இறந்து போகிறார் பாதிரியார்.

சோவுடைய காலத்தால் அழியாத படைப்புகளில் இதுவும் ஒன்று. 

No comments:

Post a Comment