Wednesday, August 9, 2017

ஆயிரம் பொய்

சோ கதை வசனம் எழுதிய ஓர் அருமையான நகைச்சுவைப் படம் "ஆயிரம் பொய்". 1969 ஜூலையில் வெளியாகிய படம். முக்தா சீனிவாசன் இயக்கிய படம்.

வி.எஸ்.ராகவனுக்குத் தம்முடைய தங்கை மகளை மருமகளாக்க விருப்பம். ஆனால் பழைய பகை காரணமாக தங்கை கணவரான வி.கே.ராமசாமியுடன் பேச்சு வார்த்தை இல்லை.

வி.எஸ்.ராகவனுடைய மகனான ஜெயஷங்கர் வி.கே.ஆர். மகளான வாணிஸ்ரீயை மணந்து கொள்ளும் தீர்மானத்துடன் தான் யார் என்பதைச் சொல்லாமல் வி.கே.ஆருடன் அறிமுகம் செய்து கொள்கிறார். ரேஸ் பைத்தியமான வி.கே.ஆருக்கு ஜெயஷங்கர் வாயில் வந்ததை டிப்ஸாகச் சொல்ல, அதுவெல்லாம் பலித்து, வி.கே.ஆர். மனத்தில் நீங்காத இடம் பிடிக்கிறார் ஜெய்.

தந்தைக்கு ரேஸ் பழக்கம் மேலும் அதிகரிக்க உதவும் ஜெய்யை முதலில் வெறுக்கும் வாணிஸ்ரீ பின் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

ஜெய் ஊருக்கு வரும்போது தம்முடன் தமது நண்பரான சோவையும் அழைத்து வருகிறார். சோ முத்து என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். படிப்பு வராத அசட்டுப் பையன் கேரக்டர். படம் முழுவதும் தனி டிராக்கில் சோ கலக்குகிறார். அதைத் தவிர ஜெய்யுடனும் அநேகக் காட்சிகளில் தோன்றுகிறார். படம் முழுக்க அவர் ராஜ்ஜியம் தான். ஜெய் கதாநாயகன் என யாராவது சொன்னால்தான் நமக்குத் தெரியும். அந்த அளவுக்கு இப்படத்தில் சோவுக்கும் அவருடைய நகைச்சுவைக்கும் முக்கியத்துவம்.

சோ மனோரமாவைக் காதலிக்கிறார். டி.பி.முத்துலட்சுமியுடைய மகளான பணக்காரி மனோரமாவுக்கும் அசட்டுப் பெண் வேடம்.
மனோரமா வளர்க்கும் நாய்க்கு உடல் உபாதை. அதற்கு வைத்தியம் பார்க்கும் டாக்டராக வேடம் போட்டு சோ வருவார். நாய்க்கு அவர் பயப்படுவதும், அதற்கு அவர் வைத்தியம் பார்க்கும் வழிமுறைகளும், அந்த வீட்டிலேயே வேலைக்காரனாக உலா வரும் வி.கோபாலகிருஷ்ணனிடம் பயந்து சாவதும், பின் இன்னொரு வில்லனான வாசுவிடம் மாட்டிக் கொண்டு விழிப்பதும், அவர்கள் எல்லோரையும் தமது வசனங்களால் தூக்கி அடிப்பதுமாக சோ படமெங்கும் அமர்க்களப் படுத்துகிறார். அவருடைய உடல் மொழியும், வசங்களும் படத்தை கலகலப்பாக நகர்த்துகின்றன.

சோவுடைய நண்பரும், நாடக நடிகருமான நீலுவுக்கு இதுதான் முதல் படம். கதா காலட்சேபம் செய்பவராக ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார். சோவுடைய அப்பாவாக தேங்காய் சீனிவாசன் வருகிறார். இன்னொரு வில்லனாக செந்தாமரை. இன்னும் பல நட்சத்திரப்  பட்டாளங்கள் படத்தில்.

எல்லா நடிகர்களும் நிறைவாக நடித்துள்ளனர். மனோரமாவும் சோவுக்கு இணையாக நகைச்சுவைக் காட்சிகளில் கலக்குகிறார். ஆனால் சோவுக்கே அதிகக் காட்சிகள்.


மனோரமா வீட்டில் இருக்கும் விலையுயர்ந்த நெக்லஸை வில்லன்கள் கூட்டம் திருட முயற்சித்து, கடைசியில் அதை அணிந்திருக்கும் வாணிஸ்ரீயைக் கடத்த, சோ அங்கே டாக்டர் வேடத்தில் நுழைய, நிறைய குழப்பங்கள், குளறுபடிகள் என வேடிக்கையாகப் படம் நகர்கிறது. கடைசியில் சுபமாகப் படம் முடிகிறது.

No comments:

Post a Comment