Thursday, August 3, 2017

எம்.ஜி.ஆர் கதையில் சோ

1968 ஆகஸ்டில் வெளியான படம் 'கணவன்'. எம்.ஜி.ஆர். எழுதிய கதை. நன்றாகவே எழுதியுள்ளார்.  எம்.ஜி.ஆர். நாயகன்; ஜெயலலிதா நாயகி. சோ பரதன் என்ற வக்கீல் கதாபாத்திரம். அவரும் மனோரமாவும் ஜோடி. நகைச்சுவையில் கலக்கியிருப்பார்கள். பா. நீலகண்டன் இயக்கம்.

கல்யாணம் செய்தால் தான் சொத்து என ஜெயலலிதாவுடைய தந்தை உயில் எழுதிவிட்டு இறந்து விடுவார். ஆனால் ஜெயலலிதாவுக்குத் திருமணத்தில் நாட்டமிருக்காது.

ஜெயலலிதா தொழிற்சாலையில் வேலை பார்க்கும் எம்.ஜி.ஆர். சம்பள விஷயத்தில் நியாயம் கேட்க போக, அவர் செய்யாத கொலை கேசில் அவரை மாட்டி விட்டு விடுவார் மேனேஜர் அசோகன்.

தூக்கு தண்டனை கைதியான எம்.ஜி.ஆரை சொத்துக்காக திருமணம் செய்து கொள்வார் ஜெயலலிதா. ஆனால் நிரபராதியென தீர்ப்பு வந்து வெளியே வந்து விடுவார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர். எப்படி ஜெயலலிதாவை மனம் திருத்தி கணவன் பெருமையை உணரச் செய்கிறார் என்பதே மீதி கதை.

விஜயகுமாரி எம்.ஜி.ஆர். தங்கை. மனோகர் எம்.ஜி.ஆரிடம் அடி வாங்கி விட்டுச் செல்வார்.

பாடல்கள் அவ்வளவாக மனத்தில் பதியவில்லை.


சோ சீனியர் வக்கீலுடைய மகளான மனோரமாவைக் காதலித்து திருமணம் செய்து கொள்வார். திருமணத்துக்குப் பின்பே அவர் வாய் பேச முடியாதவர் என்பதை அறியும் சோ, டாக்டர் உதவியுடன் அவரைப் பேச வைப்பார். ஆனால் அதன் பின் பெண்டாட்டியிடம் மிகவும் அவதிப்படுவார். தம்முடைய காதை செவிடாக்கிக் கொள்வார்; இப்படி ரசிக்கத்தக்க தனி காமெடி டிராக்.

No comments:

Post a Comment