Sunday, August 6, 2017

உலகம் இவ்வளவு தான்

புகழ் பெற்ற தேவதாஸ் படத்தை இயக்கிய வேதாந்தம் ராகவையா இயக்கிய கடைசி படங்களில் இதுவும் ஒன்று. சுப்பு ஆறுமுகம் கதை - வசனம். மூலக்கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை-இயக்கம் சுமார் தான்.

நாகேஷ் கதாநாயகன். நகைச்சுவை நாயகன் இல்லை; சற்று சீரியஸான கேரக்டர் தான். நாகேஷ் நாயகனாக உள்ள படத்தில் சோ நகைச்சுவைப் பாத்திரம் ஏற்றுள்ளார்.

நாகேஷுடைய பெரியப்பா கொள்ளைக்காரன். சாகும் தறுவாயில் அவர் மனம் திருந்தி எந்தத் தருணத்திலும் நேர்மையாக இருக்க வேண்டுமென நாகேஷிடம் சத்தியம் வாங்குகிறார். நேர்மையாக இருக்கும் நாகேஷுடைய அப்பாவான மேஜர் சுந்தர்ராஜன் கொலைப் பழியில் அதிர்ச்சியிலும் வேதனையிலும் சாகிறார். அவர் சாகும் தறுவாயில் நாகேஷ் எப்போதும் கெட்டவராக இருக்க வேண்டுமென சத்தியம் வாங்கிச் சாகிறார்.

நாகேஷ் சில நாட்கள் நல்லவராகவும், சில நாட்கள் கெட்டவராகவும் வாழ்வதால் வரும் குழப்பங்களை வைத்து கதை நகர்கிறது. நாகேஷின் ஜோடியாக ராஜ்யஸ்ரீ. அவருடைய தந்தையாக வீ. கே. ராமசாமி. அண்ணனாக சோ. சோவின் ஜோடியாக மனோரமா. நாகேஷை ஆதரிக்கும் பணக்காரராக வி.எஸ். ராகவன் நடித்துள்ளார்.

அனைத்து குழப்பங்களும் தீர்ந்து நாகேஷ் எப்போதுமே நல்லவராக இருக்க முடிவெடுக்க, படம் சுபமாக முடிகிறது.

1969 ஜனவரியில் வெளிவந்த இப்படம் மொத்தத்தில் சுமார் ராகம். பாடல்களும் சுமார் தான்.


வரதன் என்ற கதாபாத்திரத்தில் சோ வருகிறார். ஓரிரண்டு காட்சிகள் தவிர அவருடைய நகைச்சுவையும் சொல்லும்படியாக அமையவில்லை. அதற்கு காட்சியமைப்பும் வலுவில்லாத வசனங்களே காரணம்.

No comments:

Post a Comment