Thursday, August 10, 2017

சோ எழுதிய சீரியஸ் கதை

1969 ஆகஸ்டில் வெளியான 'நிறை குடம்' சோவின் எழுத்தில் வெளிவந்த ஒரு வித்தியாசமான படம். சோ பொதுவாக நகைச்சுவை வசனங்களும், அரசியல் நையாண்டி வசனங்களுமே எழுதுவார். ஆனால் இப்படம் பாதிக்கு மேல் சீரியஸ் கதை. சிவாஜி இப்படத்தில் பேசும் உணர்ச்சிப் பூர்வமான வசனங்களை எழுதியவர் சோ என்றால் நம்புவது கடினம் தான். அதுவும் சிவாஜி வாணிஸ்ரீயின் அங்கங்களை வர்ணித்து பேசும் நீண்ட வசனம் அருமையிலும் அருமை. மகேந்திரன் எழுதிய மூலக்கதைக்கு திரைக்கதை-வசனம் சோ. இயக்கம் முக்தா சீனிவாசன்.

முதல் பாதி படம் நகைச்சுவை கலாட்டா. அடுத்த பாதி அழுகையும் உணர்ச்சிப்பூர்வமும். சிவாஜி நடிகர் திலகம் தான். ஆனால் அவர் நகைச்சுவைக் காட்சிகளில் அவ்வளவாக சோபிக்கவில்லை. பிற்பகுதியில் உணர்ச்சிப் பூர்வமாக நடித்து வெளுத்து வாங்குகிறார்.

சிவாஜியும் முத்துராமனும் வைத்தியக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். உயிர் நண்பர்கள். முத்துராமனுடைய தங்கையான வாணிஸ்ரீயும் அதே கல்லூரியில் படிக்கிறார். முதலில் கீரியும் பாம்புமாக இருக்கும் சிவாஜியும் வாணிஸ்ரீயும் சில காலத்துக்குப் பிறகு காதலிக்கிறார்கள். வாணிஸ்ரீயிடம் விளையாட்டாக சவால் விட்டு, அதில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, முத்துராமனுடன் சண்டையிடுவதைப் போல நடிக்கிறார் சிவாஜி. விளையாட்டு வினையாகிறது. சிவாஜி ஓட்டிச் செல்லும் கார் விபத்துக்குள்ளாக, அதில் பயணப்படும் முத்துராமன் இறந்து போகிறார். வாணிஸ்ரீ கண்களை இழக்கிறார். சிவாஜி வேண்டுமென்றே இந்த விபத்தை நிகழ்த்தியதாக நினைக்கும் வாணிஸ்ரீ சிவாஜியை வெறுக்கிறார். பின்பு, வேறு பெயரில் சிவாஜியே வாணிஸ்ரீயை மணக்கிறார். அவர் என்ற உண்மையைத் தெரியாத வாணிஸ்ரீ அவரை மிகவும் விரும்புகிறார். கடைசியில் கண் பார்வையைத் திரும்பப் பெறுகிறார். சிவாஜி மீது தவறு இல்லை என்பதையும் அறிந்து கொள்கிறார். படம் சுபமாக முடிகிறது.

சிவாஜியுடைய தந்தையாக வி.கே.ராமசாமி, புரபஸராக தேங்காய் சீனிவாசன், வாணிஸ்ரீயுடைய தந்தையாக மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜியுடைய நண்பன் கிரியாக சோ, மலையாளம் பேசும் நடிகையாக மனோரமா, மற்றும் சச்சு, காத்தாடி ராமமூர்த்தி எனப் பல நடிகர்கள்.

தனி டிராக்கில் சோவுடைய நகைச்சுவை. அவர் எழுதிய வசனங்கள். கேட்கவா வேண்டும்? தூள் கிளப்புகிறார். யாரோ ஒருவர் பெயரைக் குருட்டாம்போக்கில் விபத்தில் இறந்து விட்டார் எனத் தமது பத்திரிகையில் போட, அந்த ஆசாமி (வி.கே.ஆர்) நேரில் வந்து திட்டும் காட்சியில் அட்டகாசமாக அறிமுகம் ஆகிறார் சோ. சினிமா நடிகையான மனோரமாவைப் பேட்டி காண போய், திருட்டுக் கேஸில் மாட்டுவதாகட்டும், பின்பு மனோரமாவை மாட்டி வைக்க முயற்சித்து அவரைக் காதலியாக அடைவதாகட்டும், சிவாஜி செய்யப் போகும் ஆபரேஷனைத் தடுக்க வரும் மேஜரைப் பைத்தியக்காரன் என அனைவரையும் நம்ப வைப்பதாகட்டும், சமையல் வேலைக்கு வருபவரை வீட்டுக்காரர் என பொய்யாக அறிமுகப் படுத்துவதாகட்டும், சோ நடிப்பும் வசனங்களும் சிம்ப்ளி சூப்பர்.


சோவுடைய வசனங்கள் படத்தின் மிகப் பெரிய பலம். இரண்டாம் பாதியில் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் காரணமாகவே சோகத்தின் தாக்கம் நம்மை மிகவும் பாதிக்காமல் படத்தை நகர வைக்கிறது.

No comments:

Post a Comment